தமிழகத்தில் மூன்றாவது நாளாக தொடரும் போர் ஒத்திகை.. எங்கெல்லாம் தெரியுமா?

Third Day War Mock Drill in Chennai | இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், மே 07, 2025 முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போர் ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றும் ( மே 09, 2025) தமிழகத்தின் சில பகுதிகளில் போர் ஒத்திகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்றாவது நாளாக தொடரும் போர் ஒத்திகை.. எங்கெல்லாம் தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Updated On: 

09 May 2025 17:07 PM

சென்னை, மே 09 : இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு போர் ஒத்திகை நிகழ்த்தி காண்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மே 07, 2025 மற்றும் மே 08, 2025 ஆகிய தேதிகளில் போர் ஒத்திகைகள் நடைபெற்ற நிலையில், இன்றும் ( மே 09, 2025) தமிழகத்தின் சில பகுதிகளில் போர் ஒத்திகைகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், எந்த எந்த பகுதிகளில் போர் ஒத்திகை நடைபெற உள்ளது, அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்திய அரசு

ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir), பஹல்காம் (Pahalgam) பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உலகை உலுக்கிய நிலையில், பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) கையில் எடுத்துள்ள இந்திய அரசு, பயங்கரவாதிகளை குறிவைத்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசும் பதில் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்தியாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் மீது நேற்று ( மே 09, 2025) இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக போர் ஒத்திகைகள் நடைபெற்று வருகிறது. மே 07, 2025 மற்றும் மே 08, 2025 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போர் ஒத்திகை நடைபெற்று உள்ளது.

மத்திய ரயில்வே நடத்திய போர் ஒத்திகை

சென்னையில் இன்று ( மே 09, 2025) மூன்றாவது நாளாக போர் ஒத்திகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் சென்னையை அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.