இன்று இந்த 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

Rain Alert : சென்னைக்கு அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் அக்டோபர் 3, 2025 அன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இன்று இந்த 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Oct 2025 16:08 PM

 IST

பொதுவாக தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் துவங்கி டிசம்பர் வரை நான்கு மாதங்கள் அதிக அளவு மழை (Rain) பெய்யும். இந்த 2025 வருடம் செப்டம்பர் மாதம் துவங்கி ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அக்டோபர் 2, 2025 நள்ளிரவு சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சரஸ்வதி, ஆயுத பூஜை விடுமுறை முடிந்து பலர் அக்டோபர் 3, 2025 அன்று சென்னை திரும்பிய நிலையில் பெய்த கனமழையால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கட்டுரையில் அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் அக்டோபர் 3, 2025 வெள்ளிக்கிழமை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாருர், நாகை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவம் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வேலைக்கு சென்றுள்ள மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சென்னை மக்களே ரெடியா? வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை மையம் அலர்ட்

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 2, 2025 அன்று  இரவு சுமார் 11.30 மணியளவில் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில் வலுவாக நிலை கொண்டது.  இந்த காற்றழுத்த தாழ்வு நிலை கோபல்பூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 160 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து 250 கி.மீ தொலைவில் காணப்படுகிறது.

மேலும், இது தொடர்ந்து நகர்ந்து, இன்று இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரா கடற்கரை பகுதிகளில், குறிப்பாக கோபல்பூர் மற்றும் பாராதீப் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : Tamilnadu Weather: தமிழகம் முழுவதும் பரவலாக மழை.. இதுதான் காரணமா?

இதன் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 2, 2025 முதல் அக்டோபர் 8, 2025 வரை மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 3 அன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.