‘என்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சி’.. செங்கோட்டையன் அதிரடி!!

TTV, Ops, Sengottaiyan: தேவர் ஜெயந்தியையொடி, பசும்பொன்னில் அரசியல் தலைவர்கள் குவிந்து வருகின்றனர். அந்தவகையில், யாரும் எதிர்பாராத வண்ணம், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகிய மூவரும் இணைந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினர். அதோடு, தங்களின் வியூகத்தை அடுத்தடுத்த சந்திப்பில் படிப்படியாக கூறுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

‘என்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சி’.. செங்கோட்டையன் அதிரடி!!

செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ்

Updated On: 

30 Oct 2025 14:53 PM

 IST

ராமநாதபுரம், அக்டோபர் 30: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன், தன்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். சும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒன்றாக வந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் செங்கோட்டையன். இதற்காக, மதுரையில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் காரில் ஒன்றாக வந்த செங்கோட்டையன், ராமநாதபுரம் வந்ததும் திறந்தவெளி வேனுக்கு  இருவரும் மாறி தொண்டர்களுக்கு கையசைத்த படி ஒன்றாக பயணித்தனர். அங்கிருந்து தொண்டர்கள் படையுடன் பசும்பொன் நோக்கி வேனிலேயே இருவரும் சென்றனர். தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே வந்ததும், அங்கு வந்த டிடிவி தினகரனுடன் அவர்கள் இருவரும் இணைந்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் மூவரும் ஒன்றாக சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Also read: ரூ.3கோடி பட்ஜெட்.. முத்துராமலிங்கத் தேவர் பெயரில் திருமண மண்டபம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

உருவாகும் புதிய அணி?:

அதிமுகவில் உள்ள செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் ஒன்றாக இருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூவரும் புதிய அணி குறித்த அறிவிப்பை செய்தியாளர்களை சந்திப்பில் அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்தவகையில், செய்தியாளர்களை மூவரும் கூட்டாக சந்தித்தனர். அப்போது, பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒருங்கிணைக்கவே பசும்பொனில் மூவரும் இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் கூறினார். மேலும், துரோகத்தை வீழ்த்தி ஜெயலலிதாவின் ஆட்சியை  உருவாக்க ஒன்று சேர்ந்துள்ளதாகவும், அந்த துரோகமே எடப்பாடி பழனிசாமி தான் என்றும் கூறினார்.

கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சி:

டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தங்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், 3 பேரும் இணைந்ததால் ‘என்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சி’ என்று கூறிச் சென்றார்.

என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்:

ஏற்கெனவே, அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கெடு விதித்த செங்கோட்டையனின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். தொடர்ந்து, அவரது கோரிக்கைகளுக்கு செவி மடுக்காமல் இருந்து வந்த நிலையில், செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் இணைந்துள்ளார். இந்நிலையில், கட்சியில் இருந்து  செங்கோட்டையனை நீக்கி நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி பழனிசாமி என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அவ்வாறு அவர் செங்கோட்டையனை நீக்கும் பட்சத்தில், நிச்சயமாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா ஆகியோர் தனித்து ஒரு அணியாக சட்டமன்ற தேர்தலை களம் காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு அவர்கள் தனித்து களம் காணும்போது, பாஜகவின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also read: ஒரே வேனில் ஓபிஎஸ், செங்கோட்டையன்.. இதுதான் இபிஎஸ் ரியாக்‌ஷன்!

ஒருவேளை இப்படி புதிதாக உருவாகும் அணியுடன் விஜய் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளும் உள்ளது. அவ்வாறு, விஜய்யுடன் இவர்கள் அனைவரும் கைக்கோர்க்கும் பட்சத்தில், நிச்சயம் பாமக உள்ளிட்ட கட்சிகளும் இவர்களுடன் இணையும் வாய்ப்புகள் உள்ளன. இவையெல்லாம் நடக்கும்பட்சத்தில், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் களம் கடுமையாக சூடுபிடிக்கும்.