Chennai Rain : கரையைக் கடக்கும் மோன்தா புயல் – தமிழ்நாடு, ஆந்திராவில் கனமழை – புயலின் தீவிரம் எப்படி இருக்கும்?
Cyclone Montha : மோன்தா புயல் வடக்கே நகர்வதால் தமிழ்நாட்டில் பெரிய தாக்கம் இல்லை. எனினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் அக்டோபர் 27, 2025 கனமழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது,அடுத்த 10 நாட்களில் மிக கனமழை ஏற்படும் சாத்தியம் குறைவு என தெரிவித்தது.

மாதிரி புகைப்படம்
வங்கக்கடலில் உருவாகி தீவிரமடைந்துள்ள மோன்தா புயல் (Cyclone Montha) இன்று (அக்டோபர் 28) மாலை அல்லது இரவில் ஆந்திரா மாநிலம் மச்சிலிபட்டணம் மற்றும் காலிங்கப்பட்டணம் இடையிலான கடல் பகுதியில் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் தற்போது வங்கக்கடலின் மத்திய பகுதியில் மையம்கொண்டு மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் வடமேற்கே நகர்கிறது. அக்டோபர் 27, 2025 அன்று இரவு 11 மணி அளவில் இது ஆந்திராவின் மச்சிலிபட்டணத்திலிருந்து 280 கி.மீ. தென் கிழக்கிலும், விசாகப்பட்டணத்திலிருந்து 410 கி.மீ. தெற்கிலும் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், ஆந்திரா, ஒடியா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஆந்திரா கடலோரப் பகுதிகளில் கனமழை
புயல் தாக்கம் காரணமாக ஆந்திராவின் சித்தூர், காக்கிநாடா, திருப்பதி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகரி தொகுதியில் கடந்த நான்கு நாட்களாக இடியுடன் கூடிய கனமழை தொடர்கிறது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால், நாகரி மற்றும் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நாளை கரையை கடக்கும் மோன்தா புயல்.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..
பாதுகாப்பு நடவடிக்கையாக, கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஆற்றங்கரைப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி மாற்று வழியை ஏற்பாடு செய்துள்ளனர். காக்கிநாடா மாவட்டத்தில் கடும் காற்று வீசியதால் பெருங்கடல் அலைகள் கரையை தாக்கியதால் கடலோர கிராமங்களில் அச்சம் நிலவியது. கடல்நீர் உள்ளூர் பகுதிகளுக்குள் நுழைந்ததால், போலீசார் மீனவர்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
திருப்பதி மாவட்டத்தில், கடலோரப் பகுதிகளாகிய ஐந்து மண்டலங்களில் 75 கி.மீ. நீள கடற்கரைப் பகுதியில் பலத்த மழை மற்றும் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை குழுக்கள் முழு ஆற்றலுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மிதமான மழை
மோன்தா புயல் வடக்கே நகர்வதால் தமிழ்நாட்டில் பெரிய தாக்கம் இல்லை. எனினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் அக்டோபர் 27, 2025 கனமழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, மோன்தா புயல் தற்போது சென்னையிலிருந்து 480 கி.மீ. கிழக்கே உள்ளது. அடுத்த 10 நாட்களில் மிக கனமழை ஏற்படும் சாத்தியம் குறைவு என தெரிவித்தது. மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மற்றும் சுற்றுவட்டார வெள்ளப்பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு, மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அடுத்த சில நாட்களில் கனமழை இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும், அரசு முழுமையாக தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க : Montha Cyclone: திருவள்ளூரில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை!!
விமான, ரயில் போக்குவரத்து பாதிப்பு
மோன்தா புயல் தாக்கம் காரணமாக விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டணம் – சென்னை இடையே 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டிகோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், புயல் காரணமாக விஜயவாடா, விசாகப்பட்டணம் பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்ப்டடுள்ளது என அறிவித்துள்ளது.