நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை… மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர்!
Indian communist leader Nallakannu: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசு சார்பில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாத செலுத்தினார். அப்போது, 72 குண்டுகள் முழங்க காவல் துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு சார்பில் மரியாதை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்ல கண்ணு உடல் நலக்குறைவால் நேற்று புதன்கிழமை ( பிப்ரவரி 25) உயிரிழந்தார். இவரது உடலானது, சென்னை தியாகராயர் நகரி உள்ள இந்திய கம்யூனிஸ் அலுவலகமான பாலன் இல்லத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இவரது உடலுக்கு, அரசு சார்பில் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நல்ல கண்ணுவின் உடலுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, வீரவணக்கம்… வீரவணக்கம்… வாழ்நாள் போராளிக்கு வீரவணக்கம் என்று முழக்கமிட்டார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் எ. வ. வேலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, அவரது மனைவி ஆனி ராஜா, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
72 குண்டுகள் முழங்க நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை
இதைத் தொடர்ந்து, மறைந்த நல்லக்கண்ணுவின் உடலுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அப்போது, போலீசார் மூன்று முறை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, போலீசார் நல்லக்கண்ணுவின் உடலை வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து, அந்த வாகனம் ஊர்வலமாக புறப்பட்டு சென்றது. அவரது உடலனாது தியாகராய நகர் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் படிக்க: நீடிக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி குழப்பம்.. மார்ச் 5 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி..
மறைந்த நல்லகண்ணு உடலுக்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு. க. ஸ்டாலின்
வாழ்நாள் போராளிக்கு வீரவணக்கம்!
தகைசால் தமிழருக்குச் செவ்வணக்கம்!#நல்லகண்ணு #Nallakannu pic.twitter.com/RkK5G1TKK1— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 26, 2026
மருத்துவ கல்விக்காக வழங்கப்படும் நல்லகண்ணு உடல்
அங்கு, அவரது உடல் மருத்துவ மாணவர்களின் உடல்கூறாய்வு பயிற்சிக்காக வழங்கப்பட உள்ளது. இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு வாழ்ந்தபோது கூறிய அவரது விருப்பத்தின்படி, அவரது உடலானது மருத்துவ கல்விக்காக வழங்கப்பட்டது. பின்னர், ஊர்வலத்தில் சென்ற அனைவரும் பிரியா விடை அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவு அந்தக் கட்சியினர் மட்டும் இன்றி பிற கட்சிகள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தவெகவினர் முன் அனுமதி பெறாமல் இதை செய்யக்கூடாது… கட்சி தலைமை போட்ட புதிய ரூல்ஸ்!