நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவதூறு – பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது
Karur Stampede : தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்புபவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் நீதிமன்றத உத்தரவுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரிதாஸ்
கரூரில் (Karur) கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணைக் குழுவை அறிவித்த நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ஐஜி அஸ்ரா கார்க் அக்டோபர் 4, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நடந்த இடங்களை ஆய்வு செய்தார். மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய 25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சென்னை மாநகர காவல்துறை யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்டோரை கைது செய்தது.
யூடியூபர் மாரிதாஸ் கைது
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பியதாக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டாக அவர் தகவல் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – இனி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய் கைது செய்யப்படுவாரா ?
இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி என்ன கூறினாலும் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் அவர் உண்மையை கூறியிருக்கிறார். விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள். ஆனால் தேவையில்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்வதில்லை என தெரிவித்தார்.
இதையும் படிக்க : விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை… மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் – நீதிபதி காட்டம்
பரப்புரையின்போது விஜய்யின் வாகனம் விபத்து ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விஜய்யின் வாகனத்தை பறிமுதல் செய்ய நீதிபதி செந்தில்குமார் அறிவுறுத்தியிருந்தார். மேலும் விஜய்யின் வாகனத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.