ஆர்வம் காட்டாத பயணிகள்: 5 பொங்கல் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து
Special Train Canceled: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக அறிவிக்கப்பட்டிருந்த 5 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் ஆர்வம் காட்டாததால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த 5 சிறப்பு ரயில்கள், பயணிகள் ஆர்வம் காட்டாத காரணத்தால் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொங்கலை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த அளவில் முன்பதிவு மற்றும் பயணிகள் வருகை இல்லாத காரணத்தால், இந்த 5 சிறப்பு ரயில்களை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன? ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு பணத்தை மீண்டும் எப்படி பெறுவது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் விவரம்
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி, ரத்து செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள் விவரம் பின்வருமாறு,
- தாம்பரம் – கன்னியாகுமரி இடையே வருகிற ஜனவரி 19, 2026 அன்று இயக்கப்படவிருந்த 06011 ரயில் எண் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் அன்று மாலை 3.30 மணியளவில் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
- அதனைத் தொடர்ந்து ரயில் எண் 06053 தாம்பரம் – நாகர்கோவில் இடையே ஜனவரி 21, 2026 மதியம் 12.30 மணியளவில் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ரயில் எண் 06033 சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் இடையே ஜனவரி 19, 2026 அன்று இரவு 11.25 மணியளவில் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பொங்கல் பண்டிகை…சென்னையில் போக்குவரத்து மாற்றம்..வெளியூர் வாசிகளே கவனம்!
- ரயில் எண் 06024 போத்தனூர் – சென்னை சென்ட்ரல் இடையே ஜனவரி 21, 2026 அன்று நள்ளிரவு 12.35 மணிய அளவில் புறப்படும் என அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- அதே போல ரயில் எண் 06023 சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே ஜனவரி 21, 2026 அன்று மதியம் 1.50 மணியளவில் கிளம்பும் என அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.
டிக்கெட் கட்டணத்தை எப்படி பெறுவது?
இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களின் டிக்கெட் பணத்தை திரும்பப் பெற வழக்கமான முறையில் ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், கூடுதல் தகவல்களுக்கு ரயில்வே இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்பற்றுமாறும் ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க : பொங்கல் பண்டிகை…உறவினர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்த்து செய்தி…இப்படி அனுப்பலாம்!
பொங்கல் பண்டிகை காலத்தில் பயணிகளின் வசதிக்காக அறிவிக்கப்பட்ட நிலையில் பயணிகள் ஆர்வம் காட்டாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கேற்றவாறு பயணிகள் தங்களின் பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளவும், மாற்று ரயில் அல்லது பேருந்து சேவைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.