மதிமுகவில் மீண்டும் முற்றிய மோதல்.. வைகோ சொல்லும் முக்கிய விஷயங்கள்.. என்ன நடக்கிறது?
MDMK Internal Issue : மதிமுகவில் மீண்டும் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டுள்ளது. மல்லை சத்யா மற்றும் வைகோ இடையே பிரச்னை உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே, மல்லை சத்யா மீது வைகோ அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தனக்கு துரோகம் செய்ததாக வைகோ குற்றச்சாட்டி உள்ளது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை, ஜூலை 10 : மதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள் எனவும் மதிமுக இருக்கக் கூடாது எனவும் சிலர் நினைப்பதாக அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ (MDMK Chief Vaiko) தெரிவித்துள்ளார். இதன் மூலம் கட்சிக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது தெரிகிறது. மதிமுகவில் மீண்டும் உட்கட்சியில் பிரச்சை ஏற்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், துரை வைகோ கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். தொடர்ந்து, வைகோ உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகள் இந்த விஷயத்தில் தலையீட்டு, இருவருக்கும் இடையேயான பிரச்னையை முடித்து வைத்தனர். இந்த நிலையில், மீண்டும் மதிமுகவில் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது, கடந்த சில நாட்களாகவே மல்லை சத்யா மீது வைகோ அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி பணிகளில் மல்லை சத்யா ஆர்வம் காட்டாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், வைகோ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மதிமுகவில் மீண்டும் முற்றிய மோதல்
இதனால், கட்சிக்குள் மீண்டும் பிரச்னை வெடித்துள்ளது. அண்மையில் கூட, மல்லை சத்யா மீது வைகோ அடுக்கடுக்கான விமர்சனங்களையும் முன்வைத்து இருந்தார். சமீபத்தில் பேட்டி அளித்த வைகோ, பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார் என கூறினார். மேலும், பல காலம் மல்லை சத்யா எனக்கு துணையாக இருந்தார் எனவும் சமீபத்தில் அப்படி இல்லை எனவும் வைகோ கூறினார். அதோடு, மல்லை சத்யா கட்சியில் இருந்து வெளியேறியவர்களுடன் அவர் தொடர்பில் இருப்பது வருத்தம் தருகிறது எனவும் வைகோ கூறினார்.
வைகோவின் இந்த கருத்துக்கு பதில் அளித்த மல்லை சத்யா, “துரோகி பட்டம் கொடுத்து தன்னை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கொடுக்கிறார்.




Also Read : கோட்சே கூட்டம் செல்லும் பாதைக்குச் செல்லாதீர்கள் – மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
’துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்ற முயற்சி’
வைகோவின் உயிரை மூன்று முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார். வாரிசு அரிசயலுக்கான வைகோ சொன்ன வார்த்தையை தாங்க முடியவில்லை” என கூறினார். மேலும் மல்லை சத்யா கூறுகையில், “நான் வெளிநாடுகளுக்கு சென்றபோது கட்சியை பற்றி பேசவில்லை என்பது மிகப்பெரிய பொய்.
வைகோ இப்படி பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 32 ஆண்டுகள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சி தலைமைக்காக உண்மையாக இருந்திருக்கிறேன்” என கூறினார். மல்லை சத்யாவின் பேச்சை தொடர்ந்து, 2025 ஜூலை 10ஆம் தேதியான இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ, “மதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள்.
Also Read: புதுக்கோட்டை : பேனரில் அமைச்சர் மெய்யநாதன் படம் மிஸ்ஸிங்.. வாக்குவாதம்
மதிமுக இருக்கக் கூடாது என சிலர் நினைக்கிறார்கள். உயிரை கொடுத்து மதிமுகவை 31 ஆண்டுகள் காப்பாற்றி வருகிறேன்” என கூறினார். எனவே, மறைமுகமாக மல்லை சத்யாவை வைகோ விமர்சிப்பதாக தெரிகிறது. இப்படியாக, மல்லை சத்யா மற்றும் வைகோ இடையே பிரச்னை நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில், மதிமுகவில் உருவாகி உள்ள பிரச்சை, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.