காலாவதியான வெளிநாட்டு உணவு பொருள்கள் விற்பனை…7 பேரை தட்டி தூக்கிய போலீசார்!
Expired Foreign Food Items Selling In India: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான பல்வேறு உணவுப் பொருள்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Expired Foreign Food Items Selling In India
இந்தியாவில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் காலாவதி தேதியை நெருங்கும் உணவு பொருள்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து குறைந்த விலையில் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்று கூறி விற்பனை செய்யப்படுவதாக டெல்லி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், டெல்லியில் சதார் பஜாரின் பஹாரி தீரஜ் மற்றும் ஃபைஸ் கஞ்ச் ஆகிய பகுதிகளில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் உணவு பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதுடன், சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து…
இது தொடர்பாக குற்றப்பிரிவு துணை ஆணையர் ஆதித்யா கெளதம் கூறுகையில், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் ஜெயிஸ்வால் என்பதும், இவர் காலாவதியான மற்றும் காலாவதி தேதியை நெருங்கும் சர்வதேச உணவுப் பொருட்களை மும்பையில் உள்ள மொத்த விற்பனை முகவர்கள் மூலம் இங்கிலாந்து, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் படிக்க: தமிழகத்தில் போலி மருந்துகள் குறித்து புகார் அளிக்க புதிய நடைமுறை!
போலி கியூ ஆர் குறியீடு ஸ்டிக்கர்
மேலும், அந்தப் பொருள்களில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள், லேபிள்கள் மற்றும் தயாரிப்பு தகவல்கள் மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே போல, போலி கியூ ஆர் குறியீடுகள், தொகுதி எண்கள் மற்றும், விலைப் பட்டியல் ஆகியவை குறித்த ஸ்டிக்கர் புதிதாக ஒட்டப்பட்டுள்ளன. மேலும், அந்த பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்டதை நம்ப வைப்பதற்காக புதிதாக பேக் செய்யப்பட்டன.
7 பேரை கைது செய்த போலீசார்
இந்தப் பொருட்கள் மாடர்ன் பஜார், ஃபுட் ஸ்டோர், நேச்சர் பாஸ்கெட், ஷாப்பிங் மால்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள இணைய வழி விற்பனை தளங்கள் ஆகியவற்றுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவக்குமார், டெல்லி மாணவியா நகரைச் சேர்ந்த பிஸ்வஜித் தாரா, பீகார் மாநிலம், தர்பங்காவை சேர்ந்த வினோத், அருண்குமார், உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரை சேர்ந்த விஜய் காந்த், இதே மாநிலம் எட்டா பகுதியைச் சேர்ந்த ஷமிம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல்
அவர்களிடமிருந்து உணவு பொருள்கள் பேக்கிங்கு தேவையான அச்சு பொறிக்கும் இயந்திரங்கள், துப்பாக்கி குண்டுகள், துப்பாக்கிகள், உணவு பேக்கிங் செய்யும் இயந்திரங்கள், ரசாயனங்கள், போலியான கியூ ஆர் கோடு ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: கேரளாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்.. இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை!