“ஆட்சி மாறினாலும் மாறாத காட்சி”.. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் தொடர்வதாக மதுப்பிரியர்கள் குமுறல்!!
இருப்பினும், மதுக்கடைகளின் இடமாற்றம் மற்றும் மூடல் போன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், மதுக்கடைகளில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் "கூடுதல் 10 ரூபாய்" வசூல் மட்டும் இன்னும் குறையவில்லை என்பது மதுப்பிரியர்களின் பெரும் கவலையாக மாறியுள்ளது. ஆட்சி மாறினாலும் டாஸ்மாக் ஊழியர்களின் இந்த வசூல் வேட்டை மாறவில்லை என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.

டாஸ்மாக்
தமிழகத்தில் அரசியல் களம் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர் விஜய் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவின் மூலம் தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அரசின் இந்த துணிச்சலான முடிவுக்குப் பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிக்க : “மதுக்கடையை மூடினால் சந்து கடைகள் திறப்பு”.. விளாசிய செளமியா அன்புமணி.. நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்!!
மதுப்பிரியர்களின் குமுறல்:
இருப்பினும், மதுக்கடைகளின் இடமாற்றம் மற்றும் மூடல் போன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், மதுக்கடைகளில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் “கூடுதல் 10 ரூபாய்” வசூல் மட்டும் இன்னும் குறையவில்லை என்பது மதுப்பிரியர்களின் பெரும் கவலையாக மாறியுள்ளது. ஆட்சி மாறினாலும் டாஸ்மாக் ஊழியர்களின் இந்த வசூல் வேட்டை மாறவில்லை என்பதுதான் யதார்த்தமாக உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையைவிட (MRP) கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது தொடர்வாதக மதுப்பிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பல இடங்களில் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.
எம்.ஆர்.பி விலையில் மது விற்பதில்லை:
இது குறித்துச் சென்னையைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு, பெயிண்டர் ராமு – கடந்த ஆட்சியில் எப்படி பாட்டிலுக்கு கூடுதலாகப் பணம் வாங்கினார்களோ, அதே நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. எம்.ஆர்.பி விலையில் மது விற்பதில்லை. வேறு வழியில்லாமல் கூடுதல் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. புதிய அரசு பெண்களுக்குப் பல சலுகைகளை வழங்குகிறது, ஆண்களுக்கும் ஏதேனும் சலுகைகளை அறிவிக்கலாம் என்றார்.
விக்ரம் (ஆட்டோ ஓட்டுநர்) “உடல் வலி மற்றும் மனக்கவலைக்காக மது அருந்துபவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு குவாட்டர் வரை குடிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால், இரண்டு பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாகச் செலவாகிறது. இது எங்களைப் போன்ற உழைப்பாளிகளுக்குப் பெரும் கூடுதல் சுமையாக உள்ளது. இந்த கூடுதல் வசூலை அரசு உடனடியாகத் தவிர்க்க வேண்டும்.”
வெங்கடேஷ் (சேப்பாக்கம்): “ரூ.140 மதிப்புள்ள குவாட்டர் பாட்டிலை ரூ.150-க்கு விற்கின்றனர். த.வெ.க அரசு அமைந்த பிறகாவது இந்தச் சுரண்டல் நிற்கும் என எதிர்பார்த்தோம். மதுபான விலையை உயர்த்தாமல், கூடுதல் வசூலைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
டாஸ்மாக் ஊழியர்கள் கூறுவது என்ன?
இந்த கூடுதல் வசூல் தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் பேசுகையில், அவர்கள் தங்களின் நிர்வாக ரீதியான கஷ்டங்களை வெளிப்படுத்துகின்றனர். மதுப்பாட்டில்களை அடுக்கும் போதும் அல்லது லோடுகளை இறக்கும் போதும் ஏற்படும் சேதாரங்களுக்கு ஊழியர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அந்த இழப்புத் தொகையை ஊழியர்களிடம் இருந்தே நிர்வாகம் வசூலிக்கிறது.
ஒவ்வொரு கடைக்கும் அரசு வழங்கும் மின்சாரக் கட்டணத் தொகை மிகக் குறைவானது. எஞ்சிய மின்சாரக் கட்டணம் மற்றும் கடையின் இதர பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க மது விற்பனைத் தொகையையே நம்ப வேண்டியுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களின் இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி, முறையான நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே இந்த கூடுதல் வசூலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிக்க : “அமைச்சர் பதவிக்காகத் துரோகம்”.. வேலுமணி, சி.வி. சண்முகம் மீது இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு!!