“SIR பணிகளில் ஆளும் கட்சியின் தலையீடு”.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!
தமிழ்நாட்டில் இன்று வரை 6.41 கோடி பேருக்கு (95.58 சதவீதம்) வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளும் கட்சியின் கட்டுபாட்டில் பிஎல்ஓக்கள் உள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி
சென்னை, நவம்பர் 22: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளில் ஆளும் கட்சியின் தலையீடு அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் SIR பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், அதிமுகவும், பாஜகவும் ஆளும் திமுக அரசை கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றன. தொடர்ந்து, டிச.4ம் தேதிக்கும் SIR பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், அதற்காக பிஎல்ஓக்களை இரவு, பகல் பாராது பணியில் ஈடுபடுத்தி வருகிறது. அதேசமயம், அவர்கள் தரப்பில் பணிச்சுமை அதிகமாக உள்ளதாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்ளை இப்பணிகளில் ஈடுபடுத்தி தீவிரம் காட்டி வருகிறது. பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்ய உதவிகள் வழங்கப்படுகின்றன.
Also read: தமிழகத்தில் 95.58% SIR படிவங்கள் விநியோகம்: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்!
மேகதாது பிரச்சினைக்கு தீர்வு:
இதனிடையே, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தாமதமாக செயல்படுவதாகவும் அவர் கூறினார். திமுக இந்தியா கூட்டணியில் இருப்பதால், உடன் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசிவிட்டு, பிரச்சனைக்கு தீர்வு காண முனைய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
மெட்ரோ ரயிலுக்கு இபிஎஸ் வழங்கிய யோசனை:
கோவையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் குறித்த கேள்விக்கு விளக்கமளித்த அவர், “மெட்ரோ திட்டத்திற்கு நகரப் பகுதியில் குறைந்தது 20 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதி. 2011-ல் அதிமுக ஆட்சியில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, கோயம்புத்தூரில் 15 லட்சம் மக்கள் தான் இருந்தனர். எனவே 2025 மக்கள் தொகை விவரங்களைத் தொகுத்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.மாநில அரசின் தவறான அணுகுமுறையால் இந்தப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
நிரந்திர டிஜிபி நியமிக்க வேண்டும்:
மேலும் பேசிய அவர், தமிழக சட்டம்-ஒழுங்கு காவல் பிரிவுக்கு நிரந்தர டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பதால், உயரதிகாரிகள் முறையாகச் செயல்படுவதில்லை. இதனால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றச் சம்பவங்களில் முறையாக துப்பு துலக்காததால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றாலும், உச்ச நீதிமன்றம் வரை சென்று சிபிஐ விசாரணை கூடாது என்று அரசு மேல்முறையீடு செய்வது ஏன்? குற்றச் சம்பவங்களின் பின்னணியில் முக்கியப் புள்ளிகள் இருப்பதாக கருதுகிறேன் என்றார்.
Also read: பிஎல்ஓக்களை திமுகவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை
SIR பணிகளில் ஆளும் கட்சி தலையீடு:
எஸ்ஐஆர் பணி மூலம் இரட்டை வாக்காளர்கள், இறந்தவர்கள் மற்றும் இடமாற்றம் செய்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும். தாம்பரம் தொகுதியில் ஒரு பாகத்தில் ஒரே கதவு எண்ணில் 320 வாக்குகளும், மற்றொரு பாகத்தில் ஒரு கதவு எண்ணில் 180 வாக்குகளும் உள்ளதாக வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் பணியில் ஆளுங்கட்சியினரின் தலையீடு உள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையரே ஆளுங்கட்சியினருக்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது. எஸ்ஐஆர் பணியில் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட வைத்தால் மட்டுமே இந்தப் பணிகள் முடிவடையும் என்று அவர் கூறினார்.