Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘SIR பணிகளில் திமுக தலையீடு’.. அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தால் தெரிவித்துள்ளபடி, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து SIR படிவங்களை வழங்கும் பணியை செய்யாமல், அப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் அலுவலகத்திலோ அல்லது அவர்களது வீட்டு வாசலிலோ அமர்ந்து, படிவங்களை அளித்து பூர்த்தி செய்ய வைத்து பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘SIR பணிகளில் திமுக தலையீடு’.. அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Nov 2025 09:18 AM IST

சென்னை, நவம்பர் 16: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது. அதோடு, திமுகவின் இச்செயலைக் கண்டித்து நாளை (நவ.17) சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. பீகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (Special Intensive revision) நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்த பணி கடந்த நவ.4ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு, வீடாக சென்று விண்ணப்பங்ககளை வழங்கி வருகிறார்கள். அவர்களுடன் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்களுடன் இணைந்து இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, டிச.4ம் தேதி இப்பணிகள் நிறைவு பெற உள்ளன. ஆனால், இந்த சிறப்பு திருத்த பணியில் குழப்பங்கள் இருப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

மேலும் படிக்க: தவெக மாநில அளவில் போராட்டம் அறிவிப்பு – விஜய் பங்கேற்பாரா?

இபிஎஸ் குற்றச்சாட்டு:

குறிப்பாக இதில், திமுகவினர் தலையீடு அதிகமாக உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக ஒருபுறம் மேற்கொண்டு வருவதாக சாடியுள்ளார்.

மறுபுறம் திமுக-வைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என அனைவரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக களத்திற்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), பெரும்பாலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அல்லாது வேறு நபர்களாகவே உள்ளனர். இதைப்பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கெனவே நியமிக்கப்பட்டு ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பணியில் சேராத காரணத்தால் புதியவர்களை நியமித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திமுக அலுவலகத்தில் SIR படிவம்:

இவர்கள் தேர்தல் ஆணையத்தால் தெரிவித்துள்ளபடி வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து SIR படிவங்களை வழங்கும் பணியை செய்யாமல், அப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் அலுவலகத்திலோ அல்லது அவர்களது வீட்டு வாசலிலோ அமர்ந்து, அங்கு திமுக-வினர் மற்றும் திமுக அனுதாபிகளை மட்டும் வரவழைத்து படிவங்களை அளித்து பூர்த்தி செய்ய வைத்து பெறுகின்றனர்.

இதன் காரணமாக, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் படுக்கையில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலையில், கணக்கெடுப்புப் படிவத்தை பதிய முடியாமல் தங்கள் வாக்குரிமையை இழக்கும் நிலை உருவாகும். மேலும், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை வாக்குப் பதிவு ஆகிய விபரங்களை BLO-விடம் வழங்கினாலும் அவர்கள் அதனை வாங்க மறுக்கின்றனர்.

மேலும் படிக்க: இனி தள்ளுவண்டி கடைகளுக்கும் உரிமம் கட்டாயம் – வெளியான முக்கிய அறிவிப்பு – எப்படி பெறுவது?

நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்:

திமுக-வைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகாரிகளின் துணையோடு திமுக-வினர் மற்றும் அவர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மட்டுமே படிவங்களை அளித்தும், மற்றவர்களை புறக்கணிக்கும் வேலைகளில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஆட்சி அதிகாரத்தைப் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக-வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சென்னையில் நாளை காலை 10 மணியளவில், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.