சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..! நேற்று ஒரே நாளில் 1.40 லட்சம் பேர் பயணம்.. ECR வழியாகச் செல்ல அறிவுறுத்தல்!
Diwali Special Bus: தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் 5 ஆம் தேதி ஒரே நாளில் 329 பேருந்துகள் மூலம் சுமார் 1.40 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாகப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 6, 2026: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளதால், நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் 5ஆம் தேதி ஒரே நாளில் 329 பேருந்துகள் மூலம் சுமார் 1.40 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாகப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக வார இறுதி நாட்கள், பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகப் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: காவல் நிலையம் அருகே பட்டாகத்தியுடன் ரகளை.. எஸ்.ஐ.-யை வெட்ட முயன்ற போதை வாலிபர்.. அதிர்ச்சி வீடியோ!!
15,659 பேருந்துகள் இயக்கத் திட்டம்
நவம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 6,573 வழக்கமான பேருந்துகளும், 9,086 சிறப்புப் பேருந்துகளும் அடங்கும். சிறப்புப் பேருந்துகளில் 7,427 அரசு பேருந்துகளும், 1,659 தனியார் ஒப்பந்தப் பேருந்துகளும் அடங்கும்.
மேலும் படிக்க: புதிய திரைப்படங்களுக்கு 6 மணி காட்சிகளுக்கு அனுமதியா?.. பொதுமக்களின் பாதுகாப்பை பணையம் வைப்பதா?.. தமிழக அரசுக்கு திமுக கடும் கண்டனம்!
இதன்படி, நவம்பர் 5ஆம் தேதி 5,061 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டிருந்தன. நவம்பர் 6ஆம் தேதியான இன்று 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 3,240 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 5,431 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை நவம்பர் 7ஆம் தேதி 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 2,976 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 5,167 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள்
பயணிகளின் வசதிக்காக சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.
- கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்.
- மாதவரம் புதிய பேருந்து நிலையம்.
- கிளாம்பாக்கம் சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகிலுள்ள தற்காலிக பேருந்து நிலையம்.
- மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையம்.
இதில் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் மறைமலைநகரில் இருந்தும், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் சிஎம்டிஏ தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே, தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் 11,197 பேருந்துகள் இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.