போலி நீட் தேர்ச்சி சான்றிதழ்.. மருத்துவ மாணவி குடும்பத்துடன் கைது
Dindigul Crime News: திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் போலி நீட் சான்றிதழ் மூலம் இடம் பெற்ற மாணவி மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் மதிப்பெண் சான்றிதழ், இட ஒதுக்கீடு சான்றிதழ்களை போலியாக தயாரித்து சேர்க்கை பெற்ற காருண்யா ஸ்ரீதர்ஷினி ஆவண சரிபார்ப்பில் சிக்கினார்.

மருத்துவ மாணவி கைது
திண்டுக்கல், அக்டோபர் 8: திண்டுக்கல் மாவட்டத்தில் போலி சான்றிதழ்களை கொடுத்து மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த மாணவி மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவி, அவரது பெற்றோர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாடு முழுவதும் இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவம் படிப்பதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்தகைய நீட் தேர்வில் மோசடி, ஆள் மாறாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மாணவி ஒருவர் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து மருத்துவ கல்லூரியில் இடம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மாணவி காருண்யா ஸ்ரீ தர்ஷினி என்பவர் தனது பெற்றோர் சொக்கநாதர் மற்றும் விஜய முருகேஸ்வரி ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வரும் நிலையில், இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்ததாக சொல்லப்படுகிறது.
Also Read: யூட்யூப் பார்த்து சம்பவம்.. கள்ள நோட்டுகள் அச்சடித்த இளைஞர்!
இதில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில் எப்படியாவது மருத்துவம் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக காருண்யா ஸ்ரீதர்ஷினி இருந்துள்ளார். ஆனால் அதற்காக நேர்மையான வழியை கடைபிடிக்காமல் போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவக் கல்லூரியில் இடம்பெற முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது பெற்றோர் சொக்கநாதர் மற்றும் விஜய முருகேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.
பின்னர் நீட் மதிப்பெண் சான்று, மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு சான்று ஆகியவற்றை போலியாக தயார் செய்து திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிலும் சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில் கல்லூரியில் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் விவரங்கள் சரிபார்ப்புக்காக அவர்களின் ஆவணங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது.
Also Read: திருமணம் செய்வதாக 50 பெண்களிடம் மோசடி.. சிக்கிய விருதுநகர் இளைஞர்!
இப்படியான நிலையில் தான் மாணவி காருண்யா ஸ்ரீதர்ஷினியின் ஆவணங்களை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதில் மோசடி நடைபெற்றதாக உடனடியாக திண்டுக்கல் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரியின் அடிப்படையில் காருண்யா ஸ்ரீதர்ஷினி, அவருக்கு உதவியாக இருந்த பெற்றோர் சொக்கநாதன் மற்றும் விஜய முருகேஸ்வரி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் மாணவிக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்தது யார் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.