திருநெல்வேலி, நவம்பர் 12: திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டிடப் பணிக்குச் சென்றிருந்தார். அப்போது, அந்த வீட்டில் இருந்த நாய் (Stray Dog) திடீரென ஐயப்பனை கடித்திருக்கிறது. இதனையடுத்து, அவர் நாய் கடிக்கு, எந்தவித மருத்துவ சிகிச்சையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அவர்குக திடீரென உடல் நடலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனையில் அவருக்கு ரேபிஸ் இருப்பது உறுதியானது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நவம்பர் 12, 2025 அன்று உயிரிழந்தார்.
ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்த கட்டிடத் தொழிலாளி
தற்போது 31 வயதாகும் ஐயப்பனுக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஐயப்பனின் வருமானத்தில் தான் அவர்களது குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐயப்பனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு ரேபிஸ் நோய் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினர். விசாரணையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டிட வேலை பார்க்கும்போது நாய் கடித்தது உறுதியானது.
இதையும் படிக்க : பல பெண்களுடன் தொடர்பு.. 60 வயது நபரை கொடூரமாக கொலை செய்த கள்ளக்காதலி!




அலட்சியத்தால் பறிபோன உயிர்
இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக ஐயப்பனை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல்நிலை மோசமடைந்து நவம்பர் 12, 2025 அன்று உயிரிழந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு நாய் கடித்தபோதும் சிகிச்சை பெறாமல் இருந்ததாலேயே இந்த மரணம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றிருந்தால் இந்நேரம் அவர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.
வேலைக்காக சென்ற இடத்தில் நாய் கடித்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள், நாய் கடித்தவுடன் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்பதையும், அப்படி செய்யாமல் இருப்பது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என்பதையும் இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது. ஐயப்பனின் திடீர் மரணம் அவரது குடும்பத்தை நிலை குலையச் செய்துள்ளது.
இதையும் படிக்க : பெண்ணின் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே செல்ல முயன்ற நபர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக நாய் கடித்தாலோ, அல்லது பல் அல்லது நகம் பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.