பீகார் தேர்தலில் காங்.,க்கு ‘தோல்வின்னு சொல்ல முடியாது’.. செல்வப்பெருந்தகை தடாலடி!!
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட 101 தொகுதிகளில் 90 தொகுதிகளில் முன்னிலை வகித்து அம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இதுவே கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் 74 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

செல்வப்பெருந்தகை
சென்னை, நவம்பர் 14: பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக பாஜக போட்டியிட்ட 101 தொகுதிகளில் 90 தொகுதிகளில் முன்னிலை வகித்து அம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. அதேசமயம் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 84 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 207 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவை என்ற நிலையில், NDA கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை கூட பொய்யாக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி அமைந்துள்ளது. அதேசமயம், மகாபந்தன் இந்தியா கூட்டணி எதிராபாராத அளவு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அக்கூட்டணி 34 தொகுதிகிளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
இதையும் படிக்க : கரூர் வழக்கு… மின் தடை ஏற்படுத்தப்பட்டதா? மின்வாரிய ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை
2 தொகுதிகளில் மட்டுமே காங்., முன்னிலை:
குறிப்பாக 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இது அக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், தங்களது கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சி வந்த 20 நாட்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். எனினும், அவர்களால் குறிப்பிட்ட அளவில் கூட வெற்றியை பெற முடியாதது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வி நாடு முழுவதும் உள்ள அக்கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பீகாரில் மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கையின் காரணமாகவே இந்த வெற்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாத்தியமானதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் மக்களுக்கான இயக்கம்:
அந்தவகையில், காங்கிரஸ் தோல்வி குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும்போது, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவே கிடையாது. காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது ஆட்சி அதிகாரத்தை சுவைக்க அல்ல; ஆட்சி அதிகாரம் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் இலக்கும் இல்லை இது மக்களுக்கான இயக்கம் என்றார்.
இதையும் படிக்க : தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை!
மேலும், வெற்றி, தோல்வியைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை. இதை தோல்வியென்று சொல்ல முடியாது. வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் வென்றால் துள்ளிக் குதிப்பதும் இல்லை, தோல்வி அடைந்தால் கவுந்தடித்து படுப்பதும் இல்லை என்று கூறினார்.
அதோடு, எஸ்ஐஆர் பற்றி நாங்கள் முன்பிருந்தே பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். 17 லட்சம் வாக்குகள் பிஹாரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து இனிமேல் ஆய்வு செய்ய வேண்டும். ஜனநாயகம் வீழ்த்து விடக்கூடாது. ஜனநாயகம் வீழ்வதற்கு யாரும் அனுமதிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.