மதிமுக அழைப்பிதழில் பிரபாகரன் படம் தான் காரணமா?..வைகோ நிகழ்ச்சியை புறக்கணித்த காங்கிரஸ்..
Congress Boycotts MDMK Equality March: திருச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ நடைபயணத்தை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. இதற்கு, அழைப்பிதழிலில் பிரபாகரன் படம் இருந்தது தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

மதிமுக நடைபயணத்தை காங்கிரஸ் புறக்கணிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார். அதன்படி, திருச்சியில் வைகோவின் சமத்துவ நடை பயணத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை ( ஜனவரி 2) தொடங்கி வைத்தார். இந்த நடைபயணத்தில், பங்கேற்பதற்காக திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு மதிமுக சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வைகோவின் இந்த நடைபயணத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான காரணம், மதிமுகவின் சமத்துவ நடை பயணத்திற்கான அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படம் அச்சிடப்பட்டிருந்தது தான் காரணம் என தகவல் வழியாக உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலை புலிகள் அமைப்பினருக்கு நேரடி தொடர்பு இருந்தது அனைவருக்கும் தெரிய வந்தது. இதனால், விடுதலை புலிகள் அமைப்பை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்த்து வந்தனர். இந்த நிலையில், சமத்துவ நடை பயணத்துக்கான அழைப்பிதழை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையிடம் அளித்த போது, அவர் அதிருப்தி தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திருப்பூரில் செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெக தொண்டர்களால் பரபரப்பு – காரணம் என்ன தெரியுமா?
சமத்துவ நடைபயணத்தை புறக்கணித்த காங்கிரஸ்
இதனால், சமத்துவ நடைபயண நிகழ்ச்சியை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். அதன்படி, இன்று திருச்சியில் நடைபெற்ற மதிமுகவின் சமத்துவ நடை பயணத்தை காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர். இதே போல, திருச்சி விமான நிலையத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியையும் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.
திமுக கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பு
இந்த நிகழ்வானது திமுக கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்திக்கு நெருக்கமான நபரான பிரவீன் சக்கரவர்த்தி, தமிழ்நாட்டின் கடன் தொகை குறித்து உத்தரப்பிரதேச மாநிலத்துடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இவரது இந்த கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
சலசலப்பு மேலும் அதிகரிப்பு
இவருக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர் எம். பி. யும் காங்கிரஸ் உள் கட்சி விவகாரங்களில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இது திமுக கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின் நடைபயண நிகழ்ச்சியில் பங்கேற்பதை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக தவிர்த்து இருப்பது சலசலப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: ஜன.5ல் 2,000 பெண்கள் பங்கேற்கும் ‘மோடி பொங்கல்’.. அமித் ஷா பங்கேற்கிறார்..