கோவையில் அதிர்ச்சி.. விஷம் குடித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பிக்கு அரிவாள் வெட்டு.. நடந்தது என்ன?

Coimbatore Crime News: கோவை மாவட்டம்ம் பொள்ளாச்சியில் அண்ணன் ரகுபதிராம் விஷம் குடித்ததை அடுத்து தம்பி செந்தில் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் தம்பி என்றும் பாராமல் அரிவாளால் கழுத்தில் வெட்டியத்தில் உயிரிழந்தார்.

கோவையில் அதிர்ச்சி.. விஷம் குடித்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பிக்கு அரிவாள் வெட்டு.. நடந்தது என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

09 Sep 2025 08:33 AM

 IST

கோவை, செப்டம்பர் 9, 2025: கோவை மாவட்டத்தில், விஷம் குடித்த அண்ணனை காப்பாற்றுவதற்காக தம்பி சென்ற நிலையில், அண்ணன் தம்பி என்றும் பாராமல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை, காளியாபுரம் பகுதியில் சோமசுந்தரபுரத்தைச் சேர்ந்த செந்தில் என்ற திருமூர்த்தி (45). இவரது அண்ணன் பெயர் ரகுபதிராம் (52). இருவரும் தேங்காய் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ரகுபதி ராமனின் மனைவி வெண்ணிலா (48), சமையல் வேலைக்கு சென்று வருகிறார். ஆனால், வெண்ணிலா வேலைக்கு செல்வது கணவர் ரகுபதி ராமுக்கு பிடிக்கவில்லை. இதனால், “வேலைக்கு செல்லக்கூடாது” என அடிக்கடி கூறி வந்தார். இருப்பினும், வெண்ணிலா அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை செய்ததால், கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

ரகுபதிராம் விஷம் குடிக்க என்ன காரணம்?

மேலும், “வேலைக்கு தொடர்ந்து சென்றால் விஷம் குடித்து இறந்து விடுவேன்” என ரகுபதி ராம் அடிக்கடி மிரட்டிவந்தார். இருந்தும், செப்டம்பர் 7, 2025 அன்று வெண்ணிலா மீண்டும் சமையல் வேலைக்கு சென்றார். இதையடுத்து, குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு சென்றதை அறிந்த ரகுபதி ராம், செல்போனில் வெண்ணிலாவை தொடர்பு கொண்டு “நான் விஷம் குடித்து விட்டேன்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: மாறும் வானிலை.. மழை ஒரு பக்கம்.. அதிகரிக்கும் வெப்பநிலை மறுபக்கம்.. ரிப்போர்ட் இதோ..

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா, உடனடியாக ரகுபதிராமின் தம்பி செந்திலுக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்படி, உறவினர்கள் மற்றும் தம்பி செந்தில் உடனடியாக ரகுபதிராமின் வீட்டிற்கு சென்று, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததால், தம்பி–அண்ணன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தம்பியை அர்வாளால் வெட்டிய அண்ணன்:

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அண்ணன் ரகுபதி ராம், தம்பி என்றும் பாராமல் அருகே இருந்த தேங்காய் வெட்டும் அரிவாளால் வெட்டினார். இதில் செந்தில் படுகாயம் அடைந்து அங்கேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக செந்திலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நேரத்தில், விஷம் குடித்த அண்ணன் ரகுபதி ராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் படிக்க: செப்டம்பர் 11ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தம்பி செந்தில் உயிரிழந்த நிலையில், காவல்துறையினருக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், குறைந்தூர் காவல்துறை இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம், காவல்துறை கண்காணிப்புடன் ரகுபதி ராமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்த உடன், அவரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.