கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை.. நள்ளிரவில் 3 பேரை சுட்டுப்பிடித்து காவல்துறை அதிரடி..
Coimbatore Crime: கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகள் மூன்று பேரும் கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு அருகே பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்ததின் பேரில் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

கோப்பு புகைப்படம்
கோவை, நவம்பர் 4, 2025: கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தி குற்றவாளிகளை பிடித்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள காலியான மைதானப் பகுதியில், தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் காரிலிருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை:
இதில் அந்த இளைஞர் கடுமையாக காயமடைந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் தனியாக இருந்த அந்தப் பெண்ணை மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தப்பிச் சென்ற இளைஞர் உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்.. தமிழகத்தில் இன்று முதல் தொடக்கம்.. வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்?
அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை அப்பகுதியில் இருந்து நிர்வாணமாக மீட்டு, அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல், அந்த இளைஞரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
7 தனிப்படைகள் அமைப்பு:
இந்த நிலையில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரம் காட்டினர். தடய நிபுணர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிசிடிவி காட்சிகள் மூலமாகவும் குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமடைந்தது. மூன்று பேரையும் பிடிப்பதற்காக ஏழு தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன.
மேலும் படிக்க: கொளுத்தும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..
துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை:
இந்த சூழலில் குற்றவாளிகள் மூன்று பேரும் கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு – பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்கச் சென்றபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் காவல்துறையினரை தாக்கியுள்ளனர். இதில் சந்திரசேகர் என்ற தலைமை காவலருக்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு ஏற்பட்டுள்ளது.
தப்பிக்க முயன்ற குற்றவாளிகளை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். மூன்று பேரின் கால்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில், அவர்கள் கீழே விழுந்துள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, மூவர் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது:
- தவசி (அ) குணா
 - கருப்பசாமி (அ) சதீஷ்
 - காளீஸ்வரன் (அ) கார்த்திக்
 
மூவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை செய்து வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. மூவரையும் அப்பகுதியில் இருந்து மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்த தலைமை காவலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முந்தைய குற்றவழக்குகள் வெளிச்சம்:
காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணையில், மூன்று பேரில் காளீஸ்வரன் மற்றும் கருப்பசாமி சகோதரர்கள் எனவும், இவர்கள் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது கல்லூரி மாணவியிடம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு இவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் குற்றவாளிகளை சுட்டுக் கட்டுப்படுத்திய இந்த சம்பவம், கோவை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.