AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Coimbatore Online Fraud: கோவையில் தொழிலதிபரிடம் ஆன்லைன் பங்கு வர்த்தகம் மூலம் ரூ.2.5 கோடி மோசடி! அதிக லாபம் தருவதாகக் கூறி நூதன ஏமாற்று

Coimbatore Crime: தொழிலதிபருக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து, செயலியில் தனது கணக்கில் இருந்த பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியரின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, பணத்தை எடுக்க நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும், தற்போது அனுமதி கோரியுள்ளதால் ஓரிரு நிமிடங்களில் பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

Coimbatore Online Fraud: கோவையில் தொழிலதிபரிடம் ஆன்லைன் பங்கு வர்த்தகம் மூலம் ரூ.2.5 கோடி மோசடி! அதிக லாபம் தருவதாகக் கூறி நூதன ஏமாற்று
கோப்பு புகைப்படம்
Sekaran S
Sekaran S | Updated On: 22 Oct 2026 10:40 AM IST

அக்டோபர் 22, 2026: கோவையைச் சேர்ந்த 63 வயது தொழிலதிபரிடம் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி முதலீடு செய்த தொழிலதிபர், பணத்தைத் திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் முதலீட்டில் ஆர்வம் காட்டிய தொழிலதிபர்!

கோவையைச் சேர்ந்த 63 வயது தொழிலதிபருக்குப் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டபோது, மறுமுனையில் பேசிய நபர் தங்களது நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய தொழிலதிபர் முதலீடு செய்யச் சம்மதித்துள்ளார். தொடர்ந்து, குறிப்பிட்ட செல்போன் செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கூறியதுடன், அந்தச் செயலியில் பயன்படுத்துவதற்கான ஐ.டி. மற்றும் ரகசிய எண்ணையும் வழங்கியுள்ளனர்.

ரூ.1 லட்சம் முதலீடு… கிடைத்த லாபத்தால் அதிகரித்த நம்பிக்கை!

தொழிலதிபர் முதற்கட்டமாக ரூ.1 லட்சம் முதலீடு செய்துள்ளார். அந்தத் தொகையுடன் லாபத்தையும் சேர்த்து, செயலியில் உள்ள தனது கணக்கிலிருந்து வங்கிக் கணக்குக்கு மாற்ற முடிந்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: புழல் சிறையில் தப்பியியோடிய 2 கைதிகளில் ஒருவர் மடக்கி பிடிப்பு.. மற்றொரு கைதிக்கு வலைவீச்சு!!

இதையடுத்து, பல்வேறு தவணைகளில் தொடர்ந்து முதலீடு செய்துள்ளார். இவ்வாறு மொத்தம் ரூ.2.5 கோடி வரை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் முதலீடு செய்த தொகையுடன் லாபமும் சேர்த்து அவரது செயலிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. இதனால், அவர் எந்தச் சந்தேகமும் இன்றி தொடர்ந்து பணத்தை முதலீடு செய்துள்ளார்.

பணத்தை எடுக்க முயன்றபோது அதிர்ச்சி!

இந்த நிலையில், தொழிலதிபருக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து, செயலியில் தனது கணக்கில் இருந்த பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர், சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியரின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, பணத்தை எடுக்க நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும், தற்போது அனுமதி கோரியுள்ளதால் ஓரிரு நிமிடங்களில் பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இதனை நம்பிய தொழிலதிபர் காத்திருந்துள்ளார்.

மேலும் படிக்க: 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரம்.. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு..

செல்போன் சுவிட்ச் ஆஃப்… ரூ.2.5 கோடியை இழந்த தொழிலதிபர்!

சிறிது நேரம் கழித்து மீண்டும் பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்ற முயன்றபோதும் முடியவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊழியரை மீண்டும் தொடர்புகொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதைத் தொழிலதிபர் உணர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபரிடம் தொடர்புகொண்ட செல்போன் எண்கள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட செயலி உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow Us