7 வயது சிறுமி காணாமல் போன விவகாரம்.. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு..
Gingee 7 Year Girl Missing Case: சிறுமி மாயமான வழக்கில் 10 நாட்களாகியும் எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், வழக்கின் விசாரணையைச் சிபிசிஐடிக்கு மாற்றித் தமிழக காவல்துறை டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது இந்த வழக்கைச் சிபிசிஐடி போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
அக்டோபர் 22, 2026: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 10 நாட்களாகியும் எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில், இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாகத் தேடியும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பிறந்தநாளைக் கொண்டாடிய மறுநாளே மாயமான சிறுமி!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வரும் வடிவேலு – பவானி தம்பதியின் இரண்டாவது மகள் 7 வயது சிறுமி ஆவார். கடந்த 12ஆம் தேதி அதிகாலை சிறுமி திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முந்தைய நாள் சிறுமி தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இரவு தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மறுநாள் அதிகாலையில் காணாமல் போனது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாததால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை!
சிறுமியைக் கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து, செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், மலைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: MLAக்களுக்கு அரசு சார்பில் புதிய கார்.. கொள்முதல் விதிகளில் அதிரடி திருத்தம் செய்த தமிழக அரசு!!
சிறுமி மாயமான பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், அந்தப் பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்கள் மற்றும் தொடர்புடைய தொலைபேசி எண்களின் அடிப்படையில் 600-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மோப்ப நாய் உதவியுடனும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள கிணறுகளிலும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடினர். சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறுமியின் தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை!
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமியின் தாயிடமும் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது மேலும், சிறுமி மாயமானது தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் படிக்க: தொடர் கனமழை.. நெல்லை, தென்காசி, குமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..
இருப்பினும், சிறுமி மாயமாகி 10 நாட்கள் கடந்தும் அவரைக் கண்டுபிடிப்பதற்கான எந்தவொரு உறுதியான தடயமும் கிடைக்கவில்லை. இதனால், வழக்கின் விசாரணையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிபிசிஐடிக்கு மாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை!
சிறுமி மாயமான வழக்கில் 10 நாட்களாகியும் எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், வழக்கின் விசாரணையைச் சிபிசிஐடிக்கு மாற்றித் தமிழக காவல்துறை டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது இந்த வழக்கைச் சிபிசிஐடி போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். சிறுமி எங்கு சென்றார், அவர் மாயமானதற்கான பின்னணி என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.