கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதல்வர், தைப்பூச விழாவில் பங்கேற்பாரா? வானதி சீனிவாசன் கேள்வி!!
Did cm mkstalin participate in Thaipusam festival: கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சரை பாராட்டுவதாகக் கூறிய அவர், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற இந்து பண்டிகைகளில் முதலமைச்சர் பங்கேற்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். குறைந்தபட்சம் வாழ்த்து கூட தெரிவிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், வானதி சீனிவாசன்
கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தைப்பூச விழாவில் பங்கேற்பாரா என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 2 நாள் பயணமாக திருநெல்வேலி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 20) பாளையங்கோட்டையில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம்; ஒன்றாக பழகும் மக்களை எப்படி எதிரிகளாக பிரிக்கலாம் என்று பலர் யோசிக்கின்றனர். ஆன்மிகத்தின் பெயரில் சில அமைப்புகளை அழைத்துச் செல்லும் வழி, வன்முறைக்கான பாதை என்பதை தமிழகம் உணர்ந்துள்ளது.மதத்தின் பெயரால் உணர்வுகளை துாண்டுபவர்களை சந்தேகப்படுங்கள்; கவனமாக இருங்கள் என்ற பைபிள் வாசகத்தை குறிப்பிட விரும்புகிறேன் என்றும் பேசியிருந்தார். முதல்வரின் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க: ஜென் Z தலைமுறை இதனை தெரிந்துகொள்ள வேண்டும்…. – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர்:
அந்தவகையில், இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர்வானதி சீனிவாசன் கூறும்போது, நெல்லையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், “எந்த மதத்தையுமோ, எந்த சமுதாயத்தையுமோ பாகுபாடு பார்க்காமல் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். திருப்பணியும் செய்து வருகிறோம். இதுவே சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என்று பலர் யோசித்து வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட கூறாத முதல்வர்:
ஆனால், மதங்களுக்கு இடையே பாகுபாடு பார்ப்பதும், மத உணர்வுகளை தூண்டி வாக்கு அறுவடை செய்வதும் திமுகவின் கடந்தகால வரலாறு என வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சரை பாராட்டுவதாகக் கூறிய அவர், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற இந்து பண்டிகைகளில் முதலமைச்சர் பங்கேற்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். குறைந்தபட்சம் வாழ்த்து கூட தெரிவிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தைப்பூச விழாவில் பங்கேற்பாரா முதல்வர்?
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேச முயன்றால் சபாநாயகர் அனுமதிப்பதில்லை; இது மத பாகுபாடு அல்லவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறும் தைப்பூச விழாவில் முதலமைச்சர் பங்கேற்க தயாரா எனவும் வினவியுள்ளார்.
இந்து கோயில்களில் நடைபெறும் திருப்பணிகள் திமுக அரசின் பணியல்ல; இந்துக்களின் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளின் மூலம் நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : திமுகவை விமர்சிக்காமல் எந்த கட்சியும் அரசியலில் இருக்க முடியாது…செந்தில் பாலாஜி!
திமுக அரசின் அராஜகம்:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்தாமல் திமுக அரசு அராஜகம் செய்ததாகவும், தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது என்றும் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதோடு, கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கிறிஸ்துவின் அன்பு மற்றும் போதனைகளை பேசாமல், மத மோதலை தூண்டும் வகையில் முதலமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.