MK Stalin: முன்னேற்றத்துக்கான பாதை.. விடியல் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ்நாடு அரசின் விடியல் பயண திட்டம் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கி, அவர்களின் பொருளாதார சுதந்திரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் மேம்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் வெற்றி, மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை, ஆகஸ்ட் 18: கல்விக்கான,வேலைவாய்ப்புக்கான,முன்னேற்றத்துக்கான பயணத்தை விடியல் பயணம் (Vidiyal Payanam) சாத்தியமாக்கி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (CM MK Stalin) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் பேருந்து நிறுத்தம் ஒன்றில் அமர்ந்திருக்கும் பெண்களிடம் பேசுகிறார். அப்போது அந்த பெண்கள் தமிழ்நாடு அரசு பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அளிப்பதாக கூறுகின்றனர். எதற்காக இந்த திட்டம் என அவர் கேட்கும்போது, பெண்களுக்கு சம அதிகாரம், மகளிரை உத்வேகப்படுத்துவது, பொருளாதார ரீதியாக சுதந்திரமாக செயல்படுவது என பதிலளிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் அதனைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு
“வீட்டவிட்டு வெளிய போயிட்டு வரணும்னாலே 50 ரூபாய் தேவை. நான் வீட்டுலயே இருந்துக்குறேன்” என்ற எண்ணத்தை – பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான – வேலைவாய்ப்புக்கான – முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது #விடியல்_பயணம்!
நமது #DravidianModel-இன் 51 மாதங்களுக்குள் விடியல்… pic.twitter.com/t16ZJ2Qzwi
— M.K.Stalin (@mkstalin) August 18, 2025
திமுக அரசின் விடியல் பயணம்
அந்த வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலினும் பேசியுள்ளார். அதாவது, “2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் மகளிர் விடியல் பயணம் குறித்த திட்டம் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட போது, நமக்கு எதிரானவர்கள் இது நிறைவேற்ற முடியாத ஒன்று, இதனால் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள் என கூறினார்கள். தங்களுடைய இஷ்டத்திற்கு கதை திரைக்கதை வசனம் எல்லாம் எழுதத் தொடங்கினார்கள்.
Also Read: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயணம்.. டோக்கன் எப்படி வாங்கலாம்?
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் இருந்த நிதி நிலைமை மாறுபடுத்தியதையும் மீறி சொன்ன மாதிரி ஆட்சி பொறுப்பேற்ற அன்றைக்கு விடியல் பயண திட்டத்துக்கு கையெழுத்துப் போட்ட கை தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கை. இந்தத் திட்டத்திற்கு ஆகும் பணத்தை செலவாக பார்க்காமல் பெண்களின் சேமிப்பாக பார்க்கிறோம். மகளிர் முன்னேற்றத்திற்கான முதலீடாக தான் பார்க்கிறோம்.
இதன் பலன் சமூகத்தில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது ஒவ்வொரு மாதமும் சுமார் ரூபாய் ஆயிரம் என ஆட்சிக்கு வந்த 51 மாதங்களில் ஒவ்வொரு மகளிலும் 50 ஆயிரம் ரூபாய் சேமித்துள்ளார்கள். இது எவ்வளவு பெரிய புரட்சி, யாராலும் மாற்ற முடியாத, மறுக்க முடியாத சாதனையாகும். இந்த விடியல் பயணத் திட்டத்தை கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் அமல்படுத்தி உள்ளார்கள். அதனால் தான் நாட்டின் அத்தனை திட்டங்களுக்கும் தமிழ்நாடு தான் முன்னோடி என சொல்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: தமிழ்நாடு பேருந்துகளில் ஒரு வருடம் இலவசம்.. தமிழக அரசின் ஸ்பெஷல் குலுக்கல் போட்டி விவரம்!
2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் அதன் தேர்தல் வாக்குறுதிகளில் மிகச்சிறந்த திட்டமாக மகளிர் இலவச பேருந்து திட்டம் உள்ளது. அனைத்து பெண்களிடமும் இத்திட்டம் மகத்தான வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.