“முதலமைச்சர் வேட்பாளர் விஜய்” தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!!
CM Candidate Vijay: தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், விஜய்க்கு துணை முதல்வர் பதவியை தருவதாக அதிமுகவில் பல தலைவர்கள் பவன் கல்யானை எடுத்துக்காட்டாக கூறி மறைமுகமாக கூறியிருந்தனர்.

தவெக பொதுக்குழு கூட்டம்
சென்னை, நவம்பர் 05: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்யை முன்மொழிந்து தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவும், பாஜகவும் தங்கள் கூட்டணிக்கு விஜய் வரவேண்டுமென மாறி மாறி கூட்டணிக்கு அழைத்த நிலையில், விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தவெக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிமுக கூட்டணி அழைப்பை அவர் நிராகரித்ததாகவும், தன்னை முதல்வராக ஏற்கும் கட்சிகள் மட்டுமே கூட்டணிக்கு வரலாம் என்ற முடிவில் தவெக உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கரூர் துயரச் சம்பவம்:
முன்னதாக, சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் சென்று பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அந்தவகையில், அவர் கடந்த செப்.27 அன்று தவெக விஜய் கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தொடர்ந்து, அரசு தரப்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதேபோல், விஜய் தரப்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் அப்பணம் செலுத்தப்ப்பட்டது.
இதனிடையே, கரூர் சம்பவத்துக்குப் பின் சுமார் ஒரு மாத காலத்திற்கு தவெக தரப்பில் எந்த அரசியல் நகர்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து அக்.27ம் தேதி அக்கட்சி சார்பில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னை அழைத்து வந்து விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார். அதோடு, அவர்கள் குடும்ப உறுப்பினராக இருந்து தேவையான உதவிகளை எப்போதும் செய்து தருவேன் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தனது அரசியல் நகர்வுகளை விஜய் தீவிரப்படுத்தி வருகிறார்.
வேகமெடுக்கும் தவெக அரசியல் பணிகள்:
அந்தவகையில், தனது தலைமையில் 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை விஜய் நியமித்தார். அதனைத் தொடர்ந்து தொண்டரணி, மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி ஆகியவற்றிற்கும் புதிய நிர்வாகிகள் நியமித்து அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், அவர் நிர்வாகிகளுடன் ஆலோசித்து பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்பட்டது.
12 தீர்மானங்கள் நிறைவேற்றம்:
அதன்படி, தவெக பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். முதலாவதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, முதலமைச்சர் வேட்பாளர் விஜய், 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் என 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.