பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி.. தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
Chief Minister MK Stalin: தமிழகம் பொருளாதாரத்தில் தொடர்ந்து 2- ஆவது ஆண்டாக இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்றது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் பெருமையுடன் கருத்து தெரிவித்துள்ளார். மீண்டும் மக்கள் ஆதரவுடன் வெற்றி தொடரும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பொருளாதா வளர்ச்சி குறித்து முதல்வர் பெருமிதம்
தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என 4 முனைப்போட்டி நிலவி வந்தது. கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் தமிழகத்தில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்கு காரணம் தங்கள் கட்சி தான் என ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் உரிமை கொண்டாடி வருகின்றனர். அத்துடன் மே 4- ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் போது, அதில் தங்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் தேர்தல் பணிகள் முடிந்து ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றுள்ளார்.
மீண்டும் திமுக ஆட்சி அமையும் என முதல்வர் நம்பிக்கை
அங்கு, காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது, சைக்கிள் ஓட்டுவது, பொதுமக்களை சந்திப்பது, அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, அவ்வப்போது மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சி அமையும் என்று செய்தியாளர்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழகம் 2- ஆவது ஆண்டாக பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..
தமிழகம் என்றாலே சாதனை.. சாதனை.. சாதனை..
அதில், தமிழகம் என்றாலே எப்போதும் சாதனை… சாதனை… சாதனை… திராவிட மாடல் என்பது தனித்துவமான மாடல்… நாங்கள் சொன்னதை, எண்களிலும் நிரூபித்து கொண்டிருக்கிறோம். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற முதல் 3 ஆண்டுகளில் அடித்தளம் அமைத்தது. தற்போது, தொடர்ந்து 2 ஆண்டுகளாக இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பான நிர்வாகத்துக்கு, உழைப்பால் துணை நின்ற தமிழக மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…!
தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!
திராவிட மாடல் தனித்துவமான மாடல்!
சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!
முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது… https://t.co/jxlGvdfL0m pic.twitter.com/LchFsI1r8J
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 28, 2026
தெற்காசியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக வேண்டும்
இது வெறும் தொடக்கம் மட்டுமே. தமிழக மக்கள் துணையோடு இன்னும் பல்வேறு உயரங்களை அடைவது உறுதி…! நம்முடைய போட்டி என்பது மற்ற மாநிலங்களுடன் அல்ல… தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர வேண்டும் என்பதற்காகவே என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், அந்த திட்டங்களால் கிடைத்த வெற்றியையும், மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளையும் விளக்கும் விதமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை.. தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி!