சென்னையில் நடந்த ட்ரிபிள் மர்டர்.. சட்டம் ஒழுங்கு என்ன நிலையில் உள்ளது? அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம்..

Chennai Murder: பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இது குறித்து பேசுகையில், மக்கள் அதிகமாகச் செல்லும் பகுதியில் இந்த கொலைகள் நடந்துள்ளது மிகவும் கவலைக்குரிய விஷயம் எனத் தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற மனநிலையையும் உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.

சென்னையில் நடந்த ட்ரிபிள் மர்டர்.. சட்டம் ஒழுங்கு என்ன நிலையில் உள்ளது? அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம்..

கோப்பு புகைப்படம்

Published: 

30 Jan 2026 10:25 AM

 IST

சென்னை, ஜனவரி 30, 2026: சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கௌரவகுமாரன், அவரது மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை என ஒரே குடும்பத்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கௌரவகுமாரனின் உடலும் குழந்தையின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மனைவியின் உடலைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பெருங்குடி குப்பைக் கிடங்குப் பகுதிகளிலும் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் வெளி மாநில மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை: 

இந்த நிலையில், தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“தமிழ்நாடு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை; பிழைப்புக்காக தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலையைத்தான் இந்த கபட நாடக திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது,” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான தனது பதிவில் அவர் மேலும் கூறியதாவது: “கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம்–ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதக் கும்பல்களுக்கு துணிச்சல் அதிகரிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வாய் கூசாமல் பொய் சொல்லும் முதல்வர்:

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் அவர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியின்றி ‘பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு’, ‘எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி’ என வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.

ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் அவர்கள், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம்–ஒழுங்கைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது – தமிழிசை சௌந்தராஜன்:

அதேபோல், பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இது குறித்து பேசுகையில், மக்கள் அதிகமாகச் செல்லும் பகுதியில் இந்த கொலைகள் நடந்துள்ளது மிகவும் கவலைக்குரிய விஷயம் எனத் தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பற்ற மனநிலையையும் உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.

மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது என்றும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு சமீப காலங்களில் அதிகரித்து வருவது மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதனை அரசு தீவிரமாகக் கட்டுப்படுத்தத் தவறி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்:

போதைப்பொருள் பழக்கம் காரணமாக இளம் தலைமுறையினர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இது சமூகத்திற்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. இந்த கொலைச் சம்பவம் தனிப்பட்ட ஒரு குற்றமாக மட்டும் பார்க்கப்படக்கூடாது; இது ஒரு பெரிய சமூகச் சீரழிவின் அறிகுறி என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடமும் தற்போது பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்து வருவதாகவும், இதற்கு முக்கிய காரணம் அரசின் அலட்சியமான அணுகுமுறையே ஆகும் என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..