நகைக்கடையில் புர்கா அணிந்து வந்த பெண்.. கத்தியை காட்டி கொள்ளை முயற்சி.. சிக்கியது எப்படி? ..
Chennai Crime: திருவொற்றியூரில் பட்டப்பகலில் நகைக்கடையில் புர்கா அணிந்து வந்த பெண்ணொருவர், கத்தி மற்றும் மிளகாய் பொடியை தூவி உரிமையாளரிடம் நகை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது துரிதமாக செயல்பட்ட நகைக்கடை உரிமையாளர், தனது குடும்பத்துடன் இணைந்து அப்பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பெண்..
சென்னை, செப்டம்பர் 12, 2025: சென்னை திருவொற்றியூர் பகுதியில், பட்டப்பகலில் புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர் நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள மஞ்su ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையை தேவராஜ் தனது மனைவி மஞ்சு மற்றும் மகன் ஹர்ஷாவுடன் இணைந்து நடத்தி வருகிறார். அந்த வகையில் செப்டம்பர் 11, 2025 தேதியான நேற்று வழக்கம் போல நகையை வாங்க வருவது போல் ஒரு பெண் புர்கா அணிந்து கடைக்குள் வந்தார். அப்போது அவர் கடை வியாபாரிகளிடம் மிகவும் சாதாரணமாக, ஒவ்வொரு நகையின் விலை, எத்தனை கிராம் எனக் கேட்டு வந்தார்.
கத்தியை காட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பெண்:
பின்னர், கடையில் இருப்பவர்கள் பின்புறத்தில் இருக்கும் நகையை எடுக்கத் திரும்பியபோது, உடனடியாக அந்த பெண் கையில் இருந்த கத்தியை காட்டி மிரட்ட முயற்சி செய்தார். அப்போது துரிதமாக செயல்பட்ட கடை உரிமையாளர் தேவராஜ், அந்தப் பெண்ணின் கையைப் பிடித்தார். உடனடியாக அந்த பெண் மற்றொரு கையில் இருந்த மிளகாய் பொடியை தூவ முயற்சி செய்துள்ளார்.
மேலும் படிக்க: காதல் தோல்வி.. வாட்ஸ்அப்பில் வந்த ஆடியோ.. ரயில் முன் பாய்ந்த இளைஞர்!
கையும் களவுமாக பிடிபட்டது எப்படி?
இதனை கண்ட மனைவி மஞ்சு மற்றும் மகன் ஹர்ஷா இணைந்து, அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே கடைக்கு வந்து, நடந்ததை விசாரித்தனர். பின்னர் அந்த பெண்ணை அமர வைத்துப் பிடித்தே விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: மனைவியுடன் வேறுநபர்.. இருவரையும் தலை துண்டித்து கொன்ற கணவர்!
விசாரணையில், அந்தப் பெண்ணின் இயற்பெயர் ஜெயசித்ரா எனவும், கணவருக்குத் தெரியாமல் கடன் வாங்கியதன் காரணமாக மாறுவேஷத்தில் வந்து நகையை கொள்ளையடிக்க முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் புர்கா அணிந்து வந்த பெண் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.