சென்னை ஒன் செயலி.. ஒரு ரூபாய் செலுத்தி டிக்கெட் பெரும் புதிய சலுகை.. இன்று முதல் அறிமுகம்..
Chennai One App: சென்னை ஒன் ஆப் மூலம் ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி மெட்ரோ, பஸ், புறநகர் ரயில் என எந்த தளத்திலும் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பஸ், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் டிக்கெட்டுகளை வெறும் ஒரு ரூபாய்க்கு வாங்கும் சிறப்பு சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 13, 2024: சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையம், சென்னை ஒன் செயலி மூலம் பஸ், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் டிக்கெட்டுகளை வெறும் ஒரு ரூபாய்க்கு வாங்கும் சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், இது நவம்பர் 13, 2025 தேதியான இன்று முதல் தொடங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் CUMTA எனப்படும் ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பு, மொபைல் ஆப் மூலம் அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து சென்னை ஒன் செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி மூலம் ஒருவர் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், கேப், ஆட்டோ உள்ளிட்ட அனைத்தையும் ஒரே தளத்தில் பயன்படுத்த முடியும். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை ஒன் செயலி – மக்களிடையே பெரும் வரவேற்பு:
இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மொபைல் பயனர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, தனிநபரின் மொபைல் எண்ணை பதிவு செய்து, OTP மூலம் அவர்கள் லாகின் செய்யலாம். பின்னர் பெயர், மின்னஞ்சல், முகவரி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்த பின் பயனர் கணக்கு உருவாக்கப்படும். இந்த செயலி மூலம் சென்னையில் பேருந்து, மெட்ரோ, ஆட்டோ, கேப், புறநகர் ரயில் என அனைத்து போக்குவரத்து தளங்களையும் பயன்படுத்த முடியும். இந்த செயலி செப்டம்பர் 22, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க: இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு.. கோவை வரும் பிரதமர் மோடி.. எத்தனை நாள் பயணம்? நோக்கம் என்ன?
இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில், இந்த செயலி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு மாதத்திலேயே சுமார் 5.5 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்கள், 14 லட்சம் பயணத் தேடல்கள், 8.6 லட்சம் டிக்கெட்டுகள் பெறப்பட்டுள்ளன. மக்கள் தொடர்ந்து இந்த சென்னை ஒன் செயலியை பயன்படுத்துவதற்கும், பணமில்லா போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் தற்போது புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரூபாய்க்கு டிக்கெட் பெரும் புதிய சலுகை:
அதாவது, சென்னை ஒன் ஆப் மூலம் ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி மெட்ரோ, பஸ், புறநகர் ரயில் என எந்த தளத்திலும் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “ சென்னை ஒன் செயலி பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது.
மேலும் படிக்க: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. மழையால் குறையும் வெப்பநிலை.. சென்னையில் எப்படி?
இந்த செயலி மூலம் பஸ், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் டிக்கெட்டுகளை வெறும் ஒரு ரூபாய்க்கு வாங்கும் சிறப்பு சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாகும். இந்த சிறப்பு சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த ஒரு ரூபாய் டிக்கெட் சலுகை ஒரு பயணத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். மற்ற சலுகைகளுடன் இதனை இணைக்க முடியாது. ஒருமுறை வெற்றிகரமாக பயணித்த பிறகு, அடுத்தடுத்த பயணங்களுக்கு வழக்கமான கட்டணங்களை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.