அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை.. சென்னையில் ரேபிஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..

Chennai: சென்னையில் முகமது நஸ்ருதீன் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் தெரு நாய் கடித்துள்ளது. உடனடியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு சில நாட்களுக்கு முன் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை.. சென்னையில் ரேபிஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

14 Sep 2025 23:02 PM

 IST

சென்னை, செப்டம்பர், 14, 2025: சென்னை ராயப்பேட்டையில், தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெருநாய் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக நாய்க்கடியில் தமிழகம், இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெருநாய் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் வெளியே சென்று சுதந்திரமாக நடமாடுவதற்கு, தெருநாய்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

தெருநாய் கடிப்பதால் பலருக்கும் ரேபிஸ் தொற்றுநோய் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக, சென்னை மாநகராட்சி தரப்பில் அனைத்து தெருநாய்களுக்கும் அந்தந்த பகுதிகளுக்கே சென்று ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

ரேபிஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு:

2025 ஜூலை மாதம், மீர்காசிபேட்டை மார்க்கெட் அருகே, முகமது நஸ்ருதீன் என்ற நபரை தெருநாய் ஒன்று கடித்தது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பிய அவர், பாதிப்புகள் ஒன்றும் இல்லை என நினைத்தார். ஆனால் 2025 செப்டம்பர் 12ஆம் தேதி, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதே சமயம், ரேபிஸ் தொற்றுநோய்க்கான அறிகுறிகளும் தென்பட்டன.

மேலும் படிக்க: சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது.. சிக்கிய சுந்தரி அக்கா மகன்.. சென்னை போலீஸ் அதிரடி!

இதனால் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ரேபிஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தனி அறையில் வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், செப்டம்பர் 13, 2025 அன்று சிகிச்சை பலனின்றி முகமது நஸ்ருதீன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் சிறுமியை கடித்த தெரு நாய்:

தெருநாய்களால் மக்களுக்கு நாளுக்கு நாள் தொந்தரவு அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் சிறுமியை தெருநாய் ஒன்று கடித்து குதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: உஷார்.. ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடரால் அலர்ஜி.. பறிபோன இளைஞர் உயிர்!

புதுச்சேரி எஸ்.பி. பட்டேல் சாலையில் உள்ள உணவகம் அருகே கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அங்கு வழியில் நடப்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி குரைக்கும் சம்பவங்கள் வழக்கமாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் சென்றவர்கள் எப்போதும் அச்சத்திலேயே இருந்துள்ளனர். அந்த நிலையில், நேற்று அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள், சாலையோரம் நின்றிருந்த சிறுமி விரட்டி கடித்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.