2வது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவன்.. பரிதாப பலி!
15 Year Old Dies in School Construction Fall | சென்னையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த மாணவர் 2 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சென்னை, டிசம்பர் 14 : சென்னை (Chennai) எம்ஜிஆர் நகர், காமராஜர் தெருவில் அரசின் மாநகராட்சி நடுநிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. பள்ளியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த ஆஷிஷ் பேரா அங்கு பணியாற்றி வந்துள்ளார். அவருடன், அவரது 15 வயது மகன் சவமென் பேராவுடம் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த சிறுவன்
சிறுவன் சவமென் வழக்கம் போல நேற்று (டிசம்பர் 13, 2025) கட்டட வேலையில் ஈடுபட்டுள்ளார். கட்டடத்தின் இரண்டாவது மாடியில் பணி செய்துக்கொண்டு இருந்த சிறுவன், அங்கு போடப்பட்டு இருந்த சாரத்தின் மீது நின்றுக்கொண்டு பலகையை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இது அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க : டிஜிட்டல் கைது மோசடி.. பெண்ணிடம் இருந்து ரூ.52 லட்சத்தை சுருட்டிய நபர்.. பகீர் சம்பவம்!
மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியான சிறுவன்
இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததன் காரணமாக அந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான சக பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் சக ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை
இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசாருக்கு பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.