சென்னையில் இன்று முதல் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம் – எங்கிருந்து எங்கே?
New Bus Route : சென்னையில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் 96 என்ற புதிய பேருந்து வழித்தடத்தை தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதில் சென்னை தாம்பரம் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து அடையாறு வரை 7 பேருந்துகள் செயல்படவுள்ளன. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னையில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் புதிய பேருந்து (Bus) வழித்தடத்தை நவம்பர் 16, 2025 இன்றுமுதல் தொடங்கியுள்ளது. பேருந்து செல்லும் வழித்தடங்கள் நேரம் உள்ளிட்ட அட்டவணையுடன் புதிய வழித்தடம் பற்றிய முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னையில் அடையார் முதல் தாம்பரம் மேற்கு வரையிலான புதிய வழித்தடம் 96 இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த சேவையை தமிழ்நாடு அரசின் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Ma.Subramanian) தொடங்கி வைத்தார். புதிய பாதையில் முதற்கட்டமாக 7 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பு மற்றும் தேவையை பொறுத்து பேருந்துகள் அதிகரிக்கப்படும்.
சென்னையில் புதிய பேருந்து வழித்தடம்
சென்னையில் தாம்பரம் மேற்கில் இருந்து அடையாறு வரை 96 என்ற புதிய வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடையாறு தொடங்கி ஜெயந்தி திரையரங்கம், சென்னை ஒன், காமாட்சி மருத்துவமனை, பள்ளிகரணை, கேம்ப் ரோடு, எஸ்ஆர்பி டூஸ்ஸ், கந்தன்சாவடி, துரைப்பாக்கம் செக்போஸ்ட், மேடவாக்கம், சந்தோஷ்புரம், செம்பாக்கம், தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு பேருந்து நிலையம் வரை இந்த பேருந்து இயக்கப்படும்.
இதையும் படிக்க : சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு இன்று முதல் 3 வேலை உணவு.. 512 இடங்களில் விநியோகம்..
சென்னையில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளி, கல்லூரிகள் செல்ல, வேலைக்கு செல்ல என பேருந்தை நம்பி இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, அதிகப் பயணிகள் உள்ள முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் இந்த புதிய வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஏற்கனவே ஏசி மற்றும் தாழ் தரை பேருந்துகளை இயக்கி வருகிறது. நகர போக்குவரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய 96 என்ற வழித்தடம் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்து இயக்க நேரம்
அடையாறு பேருந்து நிலையத்தில் இருந்து காலை 04.50 மணிக்கு தொடங்கி, 05.15, 05.40, 06.05, 06.30, 06.55, 07.20, 07.40, 08.05, 08.30, 09.00, 09.35, 10.10, 10.40, 11.05, 11.30, 11.55, 12.20, 12.50, 13.25, 13.55, 14.20, 14.45, 15.10, 15.35, 16.00, 16.30, 17.05, 17.35, 18.00, 18.25, 18.50, 19.15, 19.45, 20.25 மணி வரை தொடர்ச்சியாக பேருந்துகள் இயங்கும்.
அதே போல தாம்பரம் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து சரியாக காலை 06.15 மணிக்கு துவங்கி 06.35, 07.00, 07.25, 07.55, 08.30, 09.00, 09.20, 09.45, 10.15, 10.45, 11.10, 11.45, 12.15, 12.45, 13.10, 13.30, 14.00, 14.25, 15.00, 15.30, 15.55, 16.20, 16.45, 17.10, 17.40, 18.10, 18.45, 19.15, 19.45, 20.20, 20.35, 21.00, 21.30, 22.00 மணி வரை பேருந்துகள் இயங்கும்.
இதையும் படிக்க : நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!!
இந்த புதிய வழித்தடமானது போக்குவரத்து நெரிசலை தவிர்த்து வேகமாக செல்லக்கூடிய வகையில் வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம் தொடங்கி அடையாறு வரை பயணிப்பவர்கள் பேருந்துகள் மாறாமல் ஒரே பேருந்தில் பயணிக்க ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் பயண நேரம் குறைவதோடு, மாற்று பேருந்துகளை இனி நம்பியிருக்க வேண்டிய அவசியம் குறையும். இதுபோன்று மேலும் பல புதிய வழித்தடம் உருவாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.