குறையும் மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை நிலவரம் இதோ..
Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையின் காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை மட்டுமே இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 15, 2025: வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல், தெற்கு ஒரிசா, வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி 15 ஆகஸ்ட் 2025 தேதியான இன்று தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 15 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு சில இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை ஆகஸ்ட் 16 2025 ஆம் தேதியும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறையும் தென் மேற்கு பருவ மழை:
தென்மேற்கு பருவ மழை இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய கூடிய நிலையில் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவ மழை என்பது மே மாதமே தொடங்கியது. வழக்கமாக இது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். எனவே தென்மேற்கு பருவமழையின் போது கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்தது. தற்போது தமிழகத்தில் மழையின் தீவிரம் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தினசரி லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது.
மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி.. உணவு பரிமாறிய மேயர் பிரியா..
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) தலா 5, நாலுமுக்கு (திருநெல்வேலி), சோலையார் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), அவலாஞ்சி (நீலகிரி) தலா 4 செ.மீ அளவு மழை பதிவானது.
சென்னையில் எப்படி இருக்கும்?
ஆகஸ்ட் 17 2025 முதல் ஆகஸ்ட் 21 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாக கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை என்பது 35 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாக கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கூட்டணியை விட்டு வெளியேற முடியுமா? திருமாவளவனுக்கு சவால் விட்ட தமிழிசை சௌந்தரராஜன்!
வெப்பநிலை நிலவரம்:
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து தூத்துக்குடியில் 36.2 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 35.3 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 36.1 டிகிரி செல்சியஸ், கரூரில் 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை பொறுத்தவரை அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 34.0 டிகிரி செல்சியசும், மீனம்பாக்கத்தில் 33.9 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது.