உஷார் மக்களே.. சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்.. பிற மாவட்டங்களில் மழை இருக்குமா?
Tamil Nadu Rain Alert: தென் தமிழகமும் டெல்டா மாவட்டங்களிலும் மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், வட தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சி மற்றும் செங்கல்பட்டில் இன்று அதிகாலை முதலே அவ்வப்போது கனமழையும் மிதமான மழையும் பெய்து வருகின்றன.
வானிலை நிலவரம், டிசம்பர் 1, 2025: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகம் – புதுவை கடலோர பகுதிகளில் நிலவிய டிட்வா புயல், நவம்பர் 30, 2025 தேதியான நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, டிசம்பர் 1, 2025 அன்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளிலும், — சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோமீட்டர், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோமீட்டர், நெல்லூருக்கு தெற்கு – தென்கிழக்கே 200 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டு உள்ளது. இந்த சூழலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையத்திலிருந்து வட தமிழகம் – புதுவை கடற்கரை வரைக்கும் குறைந்தபட்ச தூரம் 40 கிலோமீட்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் புயல்:
இது அடுத்த 12 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு இணையாக வட திசையில் நகர்ந்து மேலும் வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரம் 30 கிலோமீட்டராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புயல் வலுவிழந்தாலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகில் நிலை கொண்டிருக்கும் சூழலில், டிசம்பர் 1, 2025 இன்று, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தரைக்காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அடுத்த 7 நட்களுக்கு மிதமான மழை தொடரும்:
இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 2 முதல் டிசம்பர் 7, 2025 வரையிலான நாட்களில், தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் இடி – மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்.. கோவையில் பயங்கரம்!!
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில்— தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களிலும்— அதிக கனமழை பதிவாகியுள்ளது.
தென் தமிழகமும் டெல்டா மாவட்டங்களிலும் மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே அவ்வப்போது கனமழையும் மிதமான மழையும் பெய்து வருகின்றன.