9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில், செப்டம்பர் 10, 2025 தேதியான இன்று, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், செப்டம்பர் 10, 2025: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள ஊர்களிலும் மழை பதிவாகியுள்ளது. அந்த வகையில் அதிகபட்சமாக மதுரையில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சிவகங்கை மாவட்டங்களில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை, நாகை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலையின் தாக்கம்:
தமிழகத்தில் சில பகுதிகளில் மழை இருந்தாலும், வெப்பநிலையின் தாக்கம் பகல் நேரங்களில் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 37.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருத்தணியில் 35.6 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 36.6 டிகிரி செல்சியஸ், மதுரையில் 35 டிகிரி செல்சியஸ், கரூரில் 37 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.4 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 34.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: உங்களுடன் ஸ்டாலின் முகாம்.. வேலை நாளில் பள்ளிக்கு விடுமுறை விட்ட அதிகாரிகள்
9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
அதேபோல், வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சிகளின் காரணமாக, செப்டம்பர் 10, 2025 தேதியான இன்று, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11, 2025 தேதியான நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பசி, தூக்கம் மறந்துடுங்க.. மீண்டும் திமுக ஆட்சி.. ஸ்டாலின் அறிவுறுத்தல்!
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 15, 2025 வரை சில இடங்களில் மிதமான மழை மட்டுமே இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை ஒரு பக்கம் இருந்தாலும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகலில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பசலனத்தின் காரணமாக மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அருகில் இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.