சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோசிப் கட்டாயம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
Cow license now mandatory : சென்னை மாநகர எல்லைக்குள் வளர்க்கப்படும் மாடுகள் மற்றும் எருமைகளுக்கு மைக்ரோசிப் மற்றும் லைசென்ஸ் (Licence) கட்டாயம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஜனவரி 30 : சென்னை மாநகர எல்லைக்குள் வளர்க்கப்படும் மாடுகள் மற்றும் எருமைகளுக்கு மைக்ரோசிப் மற்றும் லைசென்ஸ் (Licence) கட்டாயம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஜனவரி 30, 2026 அன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சாலைகளில் கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மேலும், பரபரப்பான சென்னை சாலைகளில் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாடுகளுக்கு மைக்ரோசிப் கட்டாயம்
புதிய விதிமுறைகளின்படி, மாடு வளர்ப்போர் தங்களின் மாடுகள் மற்றும் எருமை மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி, மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். இந்த மைக்ரோசிப்பில் மாட்டின் இனம், வயது, நிறம், உடல்நிலை விவரம் உள்ளிட்ட தகவல்களுடன், உரிமையாளரின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் ஆகிய விவரங்களும் பதிவாகும். இதன் மூலம் சாலையில் பிடிபடும் மாடுகளின் உரிமையாளரை உடனடியாக கண்டறிய முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : சென்னையில் அதிகாலையில் பயங்கரம்… தொழிலதிபர் வீட்டில் 4 பேரை கட்டிப்போட்டு நகை – பணம் கொள்ளை!
மைக்ரோசிப்புடன் சேர்த்து, மாடுகளுக்கான லைசென்ஸ் முறையும் அமல்படுத்தப்படவுள்ளது. உரிய அனுமதி பெறாமல் அல்லது மைக்ரோசிப் பொருத்தாமல் மாடுகளை பொது இடங்களில் விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடைமுறை இருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் உரிமையாளரை அடையாளம் காண முடியாததால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த புதிய மைக்ரோசிப் மற்றும் லைசென்ஸ் முறையின் மூலம், விதிமுறைகளை மீறி தொடர்ந்து மாடுகளை சாலைகளில் விடும் உரிமையாளர்களை எளிதாக அடையாளம் காண முடியும். இதன் மூலம் மீண்டும் மீண்டும் தவறு செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் போக்குவரத்து மேம்படும் என்றும் விபத்துகள் குறையும் என்றும் மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி…ஆனால் வனத்துறை வைத்த செக்…என்ன அது!
மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் செலவு, பதிவு நடைமுறைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாக, சில மாடு வளர்ப்போர் தங்களின் கவலைகளை தெரிவித்துள்ளனர். இருப்பினும், விதிகளை முறையாக பின்பற்றி தேவையான பதிவுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.