குளு குளு சென்னை.. தொடரும் மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு?
Tamil Nadu Rain Alert: வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக செப்டம்பர் 20, 2025 தேதியான இன்று, சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம், செப்டம்பர் 19, 2025: சென்னையில் கடந்த வாரம் வரை வறண்ட வானிலை நிலவிய நிலையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில், செப்டம்பர் 19, 2025 அன்று மாலை, நகரின் பல பகுதிகளில் அவ்வப்போது கனமழையும் மிதமான மழையும் பதிவானது. கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்த நிலையில், வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக குறைந்து காணப்படுகிறது. வரும் நாட்களில் வட தமிழகம் — குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மாலை நேரங்களில் இதுபோன்ற கனமழை இருக்கக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடரும் மழை:
செப்டம்பர் 19, 2025 அன்று மாலை, சென்னை புறநகர் பகுதிகளிலும் தேனாம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, சின்னமலை, அடையாறு, பெசன்ட் நகர், ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, புலித்துறை பகுதிகளிலும் நல்ல மழை பதிவானது.
மேலும் படிக்க: சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்.. வால்பாறைக்கு இனி E PASS கட்டாயம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 37° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் 34.5°, திருச்சியில் 33.4°, பாம்பனில் 33°, ஈரோட்டில் 32.6°, கரூரில் 34° செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை பொறுத்தவரையில், நுங்கம்பாக்கத்தில் 31.3° மற்றும் மீனம்பாக்கத்தில் 30.8° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:
இதே நேரத்தில், வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக செப்டம்பர் 20, 2025 அன்று, சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 25, 2025 வரை சில பகுதிகளில் மிதமான மழை மட்டும் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ’ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம்’ டெட் தேர்வு குறித்து அன்பில் மகேஷ் சொன்ன விஷயம்
தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்து வரும் நிலையில், வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.