Chennai: பேஸ்புக் மூலம் பெண்ணுடன் பழக்கம்.. சென்னை தொழிலதிபரிடம் நகை கொள்ளை!
Chennai Crime News: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் முரளி, பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணால் கடத்தப்பட்டு, 15 சவரன் நகை மற்றும் பணம் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேர் கொண்ட கும்பல், அவரை ஏமாற்றி, மாமல்லபுரம் அருகே அடைத்து வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

சென்னை தொழிலதிபரிடம் மோசடி
சென்னை, செப்டம்பர் 2: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் பேஸ்புக் மூலம் பேசி பழகி கடத்தி சென்று நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேர் மீது காதல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வளர்ச்சி எந்த அளவுக்கு பெரும் பயனாக இருந்து வருகிறதோ, அதே அளவுக்கு எதிர்மறையான சம்பவங்களாலும் நிரம்பி வழிகிறது. இப்படியான முறையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பேசி பழகி பணம் பறிக்கும் கும்பல்கள் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற மோசடி குற்றங்களை தடுக்க மத்திய, மாநில சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் சென்னையில் நடைபெற்றுள்ள சம்பவம் ஒன்று பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முரளி. தொழிலதிபரான இவருக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் பெண் ஒருவரிடம் இருந்து நட்பு அழைப்பு வந்துள்ளது. அதனை ஏற்ற முரளி கடந்த சில மாதங்களாக அந்த பெண்ணுடன் பேசி வந்துள்ளார். அவர்கள் இருவரும் ஆன்லைனில் நட்பை வளர்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர் அந்தப் பெண் முரளியை தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Also Read: Crime: மதுபான கடையில் தொடர் கொள்ளை.. காரணம் கேட்டு ஷாக்கான போலீசார்!
அதன்படி முரளி பெயரில் அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் கடந்த வாரம் அதை முன்பதிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட நாளில் இருவரும் விடுதி அறையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த அறைக்குள் இரண்டு ஆண்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் முரளியுடன் சரமாரியான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர், முரளியை சந்தித்த அந்தப் பெண் தனது மனைவி என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
மேலும் உன்னால் தனது குடும்பம் சிதைக்கப்பட்டதாக அந்த நபர் குற்றம் சாட்டினார். இதனால் என்ன செய்து என்று தெரியாமல் முரளி குழம்பி போனார். உடனே சுதாரிப்பதற்குள் அவரை அந்த கும்பல் மிரட்டி அங்கிருந்து காரில் மாமல்லபுரத்திற்கு அழைத்து சென்றது. அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து தொடர்ந்த அவரை தாக்கினர். இருவரும் அந்த பெண்ணுடன் சேர்ந்து முரளி அணிந்திருந்த சுமார் 15 சவரன் தங்க நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து தப்பிச் சென்றனர்.
Also Read: மகள் திருமணத்தன்று தாய்க்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் மூழ்கிய கிராமம்
இதற்கிடையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முரளி அங்கிருந்து தப்பித்து உடனே நேராக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் விடுதியில் உள்ள ஊழியர்களிடம் விசாரணையும், அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தும் 3 பேரையும் தேடி வருகின்றனர்.