ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கடத்தல்.. ரூ.50 லட்சம் கேட்ட கும்பல் கைது!
Krishnagiri Crime News: கிருஷ்ணகிரியில் இரண்டு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பணம் கேட்டு கடத்தப்பட்ட சம்பவத்தில், 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. போலீசாரின் விரைவான நடவடிக்கையால் கடத்தப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 30: கிருஷ்ணகிரியில் பணம் கேட்டு இரண்டு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பரபரப்புக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றிக் காணலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வஹோப் நகரைச் சேர்ந்த யூசுப் மற்றும் கணபதி நகரைச் சேர்ந்த ஜபீர் அகமது ஆகிய இரண்டு பேரும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களாக உள்ளனர். இதனிடையே ஓசூர் தாலுகாவில் குருபரப்பள்ளி கிராமம் உள்ளது. இங்கு விற்பனைக்கு உள்ள நிலம் இருந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி இவர்களுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன்படி தங்களுக்கு நிலம் வேண்டும் என கேட்டுள்ளனர். இதுதொடர்பாக மேற்கொண்டு பேச குருபரப்பள்ளி அருகே சந்திக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பணம் கேட்டு கடத்தல்
இதனை நம்பிச் சென்ற யூசுப் மற்றும் ஜபீர் அகமது ஆகிய இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட நபர்களை சந்தித்தும் உள்ளனர். ஆனால் அவர்கள் நிலம் பற்றி பேச வந்ததாக தெரியவில்லை என்பதை அந்த கும்பலின் பேச்சில் உணர்ந்தனர். சுதாரிப்பதற்குள் இருவரையும் காரில் அந்த கும்பல் கடத்தியது. பின்னர் அவர்கள் குடும்பத்தினருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தனர்.
Also Read: சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. கடைசியில் சிக்கிய இளைஞன்!
இருவரையும் விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் பணம் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் பயந்து போன யூசுப் மற்றும் ஜபீர் அகமது குடும்பத்தினர் உடனடியாக போலீசாரின் உதவியை நாடினர். கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், குற்றவாளிகளைப் பிடிக்க காவல் கண்காணிப்பாளர் பி. தங்கதுரை, துணை காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைத்தார்.
தேடுதல் வேட்டையில் சிக்கிய கும்பல்
இதனையடுத்து தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து யூசுப் மற்றும் ஜபீர் அகமது செல்போன்களை ஆய்வு செய்ததில் அது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாறசாலா காவல் நிலைய எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு குழுவினர் கேரளா விரைந்தனர். அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீட்டை சுற்றி வளைத்து 5 பேரை கைது செய்தனர். யூசுப் மற்றும் ஜபீர் அகமது ஆகியோரை மீட்டனர்.
Also Read: யாருப்பா நீ? பாம்பு பிடிக்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. இந்த தவறை பண்ணாதீங்க!
இந்த விவகாரத்தில் சாமுவேல் தாமஸ், பினாய் அகஸ்டின், அபிராம்,விஷ்ணு, சுரேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை கைது செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து போலி போலீஸ் சீருடைகள், அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.