Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. விமான அவசர கதவு பட்டனை அழுத்திய மாணவன் கைது!
Indigo Flight Emergency Exit Button Pressed: சென்னையில் இருந்து துர்காபூருக்குச் சென்ற இந்திகோ விமானத்தில், ஒரு மாணவர் தற்செயலாக அவசர கதவு திறக்கும் பட்டனை அழுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது விளக்கத்தை ஏற்காத விமான நிர்வாகம், அவரை விமானத்திலிருந்து இறக்கி விட்டது.

இண்டிகோ விமானம்
சென்னை, ஜூலை 28: சென்னையில் (Chennai) இருந்து புறப்பட தயாராக இண்டிகோ விமானத்தில் (Indigo Flight) அவசர கால கதவு திறப்பதற்கான பட்டனை அழுத்திய மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது. கவன குறைவால் தெரியாமல் அழுத்திவிட்டதாக கூறிய அவரது பயணத்தை ரத்து செய்து விமானத்திலிருந்து அவரை கீழே இறக்கி விட்டனர். வழக்கு பதிவு செய்து பயணியிடம் தொடர்ந்து சென்னை விமான நிலைய (Chennai Airport) காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படுவதற்கு முன்பு குறிப்பிடத்தக்க இடையூறு மற்றும் தாமதம் ஏற்பட்டது.
என்ன நடந்தது..?
சென்னையில் இருந்து துர்காபூருக்கு 164 பேருடன் (158 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள்) இண்டிகோ விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் கிளம்ப தயாராக இருந்த நிலையில், கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. விமானம் புறப்படுவதற்காக டாக்ஸியில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் அவசர அலாரம் ஒலித்தது. இது அவசர கதவை திறந்ததாக கூறப்பட்டது. இதனால் பதற்றமடைந்த விமானி உடனடியாக கேபின் குழுவினரை விசாரணை செய்ய அறிவுறுத்தினார்.
ALSO READ: தமிழகத்தில் தொடரும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
அந்த நேரத்தில், அவசரகால கதவுக்கு அருகே அமர்ந்திருந்த ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயதான சர்க்கார் என்ற பயணி, கதவு கைப்பிடியை இயக்க முயன்றதாக விமான குழுவினர் கண்டறிந்தனர். விசாரணையின்போது, சர்க்கார் தன்னை சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் என்றும், தனிப்பட்ட வேலைக்காக துர்காபூருக்கு செல்ல இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், சர்க்கார் தான் வேண்டுமென்றே கதவை திறக்க முயற்சிக்கவில்லை என்றும், அவசரகால பட்டனை தற்செயலாக அழுத்தியதாகவும் தெரிவித்தார். இருப்பினும், விமானி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என இருவரும் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சர்க்காரின் துர்காபூர் விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். அவரது, லக்கேஜ்களும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டன.
தொடர்ந்து, சர்க்காரை இண்டியோ பாதுகாப்பு குழுவினர் சென்னை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ: போதைப்பொருள் பழக்கம்.. போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கிய இருவர்..
பாதுகாப்பு நடைமுறைகள், பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் ஒருமுறை சோதனை செய்தபிறகு, இண்டிகோ விமானம் மீதமுள்ள 157 பயணிகளை ஏற்றிக்கொண்டு சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக துர்காபூருக்கு புறப்பட்டு சென்றது.