நெரிசலுக்கு சூப்பர் தீர்வு.. செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம்.. எப்போது திறப்பு தெரியுமா?

Chengalpattu Bus Terminus : செங்கல்பட்டு பேருந்து நியைத்தின் கட்டுமான 2025ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்து, 2026 ஜனவரி மாதத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பேருந்து நிலையம் அமையும் பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, தென் மாவட்ட மக்களுக்கும் பயன்படலாம்.

நெரிசலுக்கு சூப்பர் தீர்வு.. செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம்.. எப்போது திறப்பு தெரியுமா?

செங்கல்பட்டு பேருந்து நிலையம்

Updated On: 

03 Jul 2025 20:15 PM

செங்கல்பட்டு, ஜூலை 03 : செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய (Chengalpattu Bus Terminus) கட்டுமான பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என அமைச்சர் சேகர் பாபு (Minister Sekar Babu) தெரிவித்துள்ளார். அதன்பிறகு, செங்கல்பட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவ்ல வெளியாகி உள்ளது. செங்கல்பட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையின் புறநகர் பகுதியில் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்னை நிகராக செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தவுடன், செங்கல்பட்டு மாவட்டம் மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றே சொல்லலாம்.

செங்கல்பட்டு பேருந்து நிலையம்

தற்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு திட்டங்கள் அம்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் வர உள்ளது. இதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

30 ஏக்கர் பரப்பளவில் ரூ.130 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் அமைகிறது. செங்கல்பட்டு பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. இந்த பேருந்து முனையத்தில் இரண்டு தளங்கள் அமைய உள்ளது. ஒரே நேரத்தில் 41 பேருந்து நிறுத்தும் அளவிற்கு 44 நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன.

பேருந்து நிலையத்தில் கடைகள், ஹோட்டல்கள் அமைக்கப்பட உள்ளன. பெரிய வாகன நிறுத்துமிடமும் அமைய உள்ளது. இதில், 67 கார்கள் மற்றும் 782 இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், தாய்மார்களுக்கு தனி அறை, மாற்றுத்திறனாளிகள் அமருவதற்காக தனி இடம், பெண்கள், ஆண்களுக்கு தனி கழிவறை, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிவறை உள்ளிட்ட வசதிகளும் வர உள்ளதாக தெரிகிறது.

எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

இந்த பேருந்து முனையத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்பட உள்ளது. இதன் மூலம், தென்மாவட்ட பயணிகளுக்கு இனி ஈஸியாக செங்கல்பட்டில் இருந்தே செல்ல முடியும். இதனால்,  புறநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் குறையக் கூடும்.   இந்த நிலையில்,இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழமத் தலைவரும், அமைச்சருமான சேகர்பாபு பார்வையிட்டார்.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “செங்கல்பட்டு பேருந்த நிலைய பணிகளை 2025ஆம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 2026 ஜனவரி மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

இங்கிருந்து பேருந்துகள் திருச்சி, பெங்களூரு, ஓசூர் மற்றும் விழுப்புரம் போன்ற முக்கிய வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியபின், சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையும்” என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், “மாமல்லபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் ஜனவரி 2026 க்குள் பயன்பாட்டிற்கு வரும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் குறைந்த விலை உணவகம் திறக்கப்படும். குத்தம்பாக்கம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், ஆவடி பேருந்து நிலையங்களிலும் இதே போன்ற குறைந்த விலை உணவகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என சேகர்பா தெரிவித்தார்.