திமுக அரசுக்கு சாவு மணி அடித்து விட்டது…இணையமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!
Central Joint Minister Criticized Dmk Govt: தமிழகத்தில் பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை இல்லாமல் அராஜக ஆட்சி நடத்தி வரும் திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு சாவு மணி அடித்து விட்டதாக எல். முருகன் தெரிவித்தார்.

திமுகவுக்கு சாவு மணி அடித்து விட்டது
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியில் பாரதீய ஜனதா கட்சியின் செயல் தலைவரின் பங்கு முக்கியமானதாகும். அவருடைய அனுபவம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியானது பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து வந்தது. பல வாக்காளர்கள் இறந்து போனவர்களாகவும், இரு இடங்களில் வாக்குரிமை பெற்றவர்களாகவும் இருந்தனர். இதையெல்லாம், சரி செய்ய வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. அந்த பணிகளை தான் தற்போது தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
அரசியல் காரணத்துக்காக எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு
அரசியல் காரணத்துக்காகவே எஸ் ஐ ஆர் பணிகளை திமுக எதிர்த்ததே தவிற எஸ். ஐ. ஆர் பணிகள் அனைத்து கட்சிகளுக்கும் தேவையானதாகும். இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் எதிர்க் கட்சிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்திருந்தன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் சுமார் 80 சதவீதத்துக்கு மேலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
மேலும் படிக்க: விஜய் குறித்த கேள்வி…டென்ஷனான சீமான்…அடுத்து நடந்தது என்ன!
மக்களுக்கு எதிராக அராஜக ஆட்சி நடத்தும் திமுக
திமுக அரசு மிகப் பெரிய தோல்வியை சந்திக்கக்கூடிய அரசாக உள்ளது. இந்த அரசானது ஏழை, எளிய மக்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் நலனில் கவனம் செலுத்தவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு வந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை தாக்கி சிறையில் அடைக்கும் அராஜக ஆட்சியை திமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
திமுக அரசுக்கு சாவு மணி அடித்து விட்டது
இதனால், திராவிட முன்னேற்ற கழகத்துக்கு சாவு மணி அடித்து விட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவி வீட்டுக்கு செல்வதற்கு தயாராக உள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முருக பக்தர்களின் உணர்வுகளை திமுக அரசு மதிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை மதிக்காத காரணத்தினால் தீக்குளிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழக அரசு பதவி விலக வேண்டும்
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்த முருக பக்தரான பூரண சந்திரனின் உயிரிழப்புக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பொது மக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: எத்தனை லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் உள்ளிட்ட விஐபி தொகுதிகளின் நிலவரம்!!