அடுத்தடுத்து அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தமிழகத்தில் பரபரப்பு!!

Bomb threat: ஏற்கெனவே, நேற்று முன்தினம் டெல்லியல் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி, தமிழகத்திலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய அமைச்சர்கள் வீட்டிற்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தமிழகத்தில் பரபரப்பு!!

அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், சேகர்பாபு

Updated On: 

12 Nov 2025 12:56 PM

 IST

சென்னை, நவம்பர் 12: அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ், கே.என்.நேரு ஆகியோ வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல முக்கிய பிரபலங்களின் வீடுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு, நடிகர் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயில் மூலமும் குறுஞ்செய்தி மூலமும் இதுபோன்று மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டுபிடிக்கவும் முடியாமல், பொருட்படுத்தாது கடந்துச் செல்லவும் முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருகிறது.

இதையும் படிக்க : SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக கூட்டணி கட்சிகள்!

தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. அதுபோன்ற மிரட்டல்கள் டிஜிபி அலுவலகத்திற்கோ, சம்மந்தப்பட்ட நபருக்கு தனிப்பட்ட முறையிலோ இமெயில் மூலம் அனுப்பப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வளவு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தாலும், காவல்துறையினரும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தமிழக டிஜிபி அலுவலகம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அமைச்சர் சேகர்பாபு வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரச் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சோதனையின் முடிவில், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, திருச்சியில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இல்லங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இரண்டு அமைச்சர்கள் வீட்டிற்கும் விரைந்து சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கும் தீவிரச் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: வாக்காளர் திருத்தப் பட்டியலை திமுக எதிர்ப்பது இதற்குதானா? நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!

அதோடு, ஒரே நாளில் திமுக அமைச்சர்களான சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய 3 பேர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.