மாதவரம்-மணலி ஏரியில் படகு சவாரி சேவை…எப்போது தொடங்குகிறது தெரியுமா!
Boating Services Start In Madhavaram And Manali Lakes: சென்னையில் மாதவரம் மற்றும் மணலி ஆகிய ஏரிகளில் படகு சவாரி சேவை விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான முன்னோட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன. படகு சவாரி எப்போது தொடங்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணலி-மாதவரம் ஏரியில் படகு சவாரி
சென்னையில் மாதவரம் ஏரி மற்றும் மணலில் ஏரி முக்கிய ஏரியாக இருந்து வருகிறது. இந்த ஏரியை தூர்வார வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, இந்த ஏரிகளை சென்னை மாநகராட்சி ரூ. 4.56 கோடி செலவில் முழுமையாக தூர்வாரி ஆழப் படுத்தியது. இந்த பணிகளானது கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நடைபெற்றன. 66 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாதவரம் ஏரி மற்றும் 29 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணலி ஏரிகளை ஆழப்படுத்திய போது எடுக்கப்பட்ட மணல் அந்த ஏரியின் கரைகளை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஏரிகளில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
படகு சவாரிக்கான முன்னோட்டம்
அதன் அடிப்படையில், கடந்த சில நாட்களாக இரு ஏரிகளிலும் படகு சவாரிக்கு முன்னோட்டமாக மோட்டார் படகுகளை இயக்குவதற்கு போதிய ஆழம் உள்ளதா என்பது தொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், பெடல் படகுகள், மோட்டார் படகுகள் ஆகியவற்றை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல, இந்த இரு ஏரிகளை சுற்றியும் சுற்றுலாப் பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதிகள், வாகன நிறுத்தும் இடங்கள், கழிப்பறைகள், காத்திருப்பு அறைகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க: தூத்துக்குடி-மீளவிட்டான் ரயில் நிலையங்களில் இன்டர் லாக்கிங் சிஸ்டம் அமைப்பு…மதுரை கோட்டத்தில் இதுவே முதல் முறை!
மாதவரம்-மணலி ஏரியில் நடைபாதை
மேலும், சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்காக மாதவரம் ஏரியில் 750 மீட்டருக்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 1,650 மீட்டருக்கு நடை பாதைகள் நீட்டிக்கப்படும் பணி நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஏரியை சுற்றி சுமா 2.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து செல்லலாம். இதே போல, மணலி ஏரியில் 1.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபாதை உள்ளது. மேலும், ஏரியை சுற்றி சுற்றுச் சுவர் கட்டுதல், மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 11.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
படகு சவாரி சேவை எப்போது தொடங்கும்
இதே போல, எர்ணாவூர் ஏரியிலும் படகு சவாரி ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாதவரம் மற்றும் மணலி ஏரிகளில் படகு சவாரி தொடங்கப்பட உள்ளதால் அந்தப் பகுதி விரைவில் சுற்றுலா தளமாக மாறும். இதனால், இந்தப் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த இரு ஏரிகளிலும் பொங்கல் பண்டிகையையொட்டி, படகு சவாரி சேவை தொடங்கப்படும் என்று சுற்றுலாத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மழையும் இருக்கு பனியும் இருக்கு.. எத்தனை நாட்களுக்கு? வானிலை சொல்வது என்ன?