எதை மறைக்க வழக்குப்பதிவு? சமூக வலைதள கணக்காரளர்கள் கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்..
Nainar Nagendran Condemns DMK: 25 சமூக வலைதளக் கணக்குகள் வைத்த நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ தன்னால் நிகழ்ந்த தவறை திரையிட்டு மறைக்க தன்னை கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்குரலை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம்” என குறிப்பிட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, செப்டம்பர் 30, 2025: கரூர் கூட்ட நெரிசலில் பலரும் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவிட்ட 25 சமூக வலைதளக் கணக்குகள் வைத்த நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்குப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் அவர், “ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ள நேரத்தில் சகோதரத்துவத்துடன் தோள் கொடுப்பதை விட்டு சர்வாதிகாரத்தை கையில் எடுப்பது திராவிடம் மாடலா. தன்னால் நிகழ்ந்த தவறை திரையிட்டு மறைக்க தன்னை கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்ப்புகளை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம்,” என குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் நடந்தது என்ன?
செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். மதியம் 12 மணிக்கு நடைபெற இருந்த பிரச்சாரம் மாலை 7 மணிக்கு நடைபெற்றது. அந்த நிலையில் அங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். குறுகிய இடம் என்பதால் பலரும் மூச்சுவிட முடியாமல் அவதியுற்றனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையை முடித்து வெளியேறிய பின் மக்கள் வெளியேறத் தொடங்கிய போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாஜக தரப்பில் எட்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
25 சமூக வலைத்தள கணக்காளர்கள் மீது வழக்குப்பதிவு:
இதற்கிடையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரி எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், சமூக வலைதளக் கணக்குகள் வைத்த நபர்கள் அவதூறு பரப்பும் வகையில் தகவல் வெளியிட்டதாக அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, “இந்த கூட்டநெரிசலுக்கு காரணம் மறைமுகமாக திமுக தான்” என்றும், “அங்கு நடந்தது திட்டமிட்ட சதி” என்றும் கருத்துகளை வெளியிட்டதாக 25 சமூக வலைத்தள கணக்காளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதை மறைக்க இந்த அவசர வழக்குப்பதிவு – நயினார் நாகேந்திரன் கேள்வி:
பழியைத் துடைக்க வழக்கு பதியும் பாசிச திமுக அரசு!
கரூர் கூட்ட நெரிசல் குறித்து வதந்தி பரப்பியதாகக் கூறி 25 சமூக வலைதளக் கணக்காளர்கள் மீது திமுகவின் ஏவல்துறை வழக்கு பதிந்து 3 பேரைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளபோது சகோதரத்துவத்துடன்… pic.twitter.com/HH87w4kixf
— Nainar Nagenthran (@NainarBJP) September 29, 2025
இந்த நிலையில், இதற்குப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “கரூர் கூட்டநெரிசல் குறித்து வதந்தி பரப்பியதாக கூறி 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்கு பதிவு செய்து மூவர் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ள வேளையில் சகோதரத்துவத்துடன் தோள் கொடுப்பதை விட்டு சர்வாதிகாரத்தை கையில் எடுப்பது திராவிட மாடலா? மக்களை திசைதிருப்புவதற்காக உயிர் பிழைத்தவர்களை கைது செய்வது நியாயமா?
இப்படி அவசரகதியில் வழக்கு பதிவு செய்வதன் மூலம் எதை மூடி மறைக்கிறார்கள்? யாரைக் காப்பாற்றுகிறார்கள்? தன்னால் நிகழ்ந்த தவறை திரையிட்டு மறைக்க தன்னை கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்குரலை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம். சிபிஐ விசாரணை மூலம் உண்மையை கண்டறிந்து, இறப்புக்கான நீதியை பெற்று தருவது மட்டுமே பலியான 41 அப்பாவி மக்களுக்கு ஒரு பொறுப்பான அரசு செலுத்தும் உண்மையான அஞ்சலி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.