ஆயுத பூஜைக்கு பொரி படைக்க முடியுமா? அரசி விலை உயர்வால் பொரி விலை உயர வாய்ப்பு.. மக்கள் அதிர்ச்சி!
Ayudha Puja Puffed Rice Price Rise : தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சுவாமிக்கு படைக்கக்கூடிய பொரியின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசி விலை உயர்வு காரணமாக பொரி விலை உயரும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 19- ஆம் தேதி ( திங்கள்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த பூஜையின் போது சுவாமிக்கு படைக்கும் பல்வேறு பலகாரங்களில் முக்கிய இடம் பிடிப்பது பொரி ஆகும். இதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பகுதியில் இரவு, பகலாக பொரி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வார காலமாக காவேரிப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக பொரி தயாரிக்கும் பணிகள் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொரி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதே போல, தமிழகத்தில் ஈரோடு. சென்னை. சேலம். வேலூர். மதுரை. கோயம்புத்தூர். தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மொத்த விற்பனைக்காக பொரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
100 லிட்டர் அளவு பொரி மூட்டை ரூ. 380
அந்தந்த பகுதிகளிலிருந்து சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொது மக்களுக்கு பொரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, 100 லிட்டர் அளவு கொண்ட ஒரு மூட்டை பொறி ரூ. 380- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு படி பொரி ரூ. 10- க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஆயுத பூஜை நெருங்கி வரும் நிலையில் பொரிக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதன் விலை உயர வாய்ப்பு இருப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: விண்ணை முட்டும் அரசி விலை.. அரசு எடுத்த அதிரடி முடிவு.. கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்க திட்டம்!




அரிசி விலை உயர்வால் பொரி விலை உயரும்
இது தொடர்பாக உற்பத்தியாளர்கள் மேலும் கூறியதாவது: பொரிகளை தயாரிப்பதற்கான அரிசி வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு கிலோ அரிசி ரூ. 33- க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது எல் நினோ தாக்குதல் காரணமாக அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அரிசி கிலோவுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 43- ஆக உயர்ந்துள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்ந்த நிலையில், 6 கிலோ கொண்ட ஒரு மூட்டை பொரியின் விலை ரூ. 380-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொரிக்கான தேவை அதிகரிக்க வாய்ப்பு
காவேரிப்பட்டினம் பகுதியில் தினமும் சுமார் 3 ஆயிரம் மூட்டை பொரி தயார் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்ததால் பொரி தயாரிப்பு பணி சற்று தாமதமாக தொடங்கப்பட்டது. தற்போது, ஆயுத பூஜை நெருங்கி வருவதால் பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், பொரிக்கான தேவை அதிகரித்து விலையும் உயர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: ரயில்களில் ஹெட்போன் இல்லாமல் பாடல் கேட்டால் அவ்வளவுதான்.. 6 மாதம் கம்பி எண்ணனும்.. ரயில்வே அதிரடி அறிவிப்பு!