Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் ஏடிஎம் கொள்ளை முயற்சி.. உ.பி.,யைச் சேந்த 3 பேர் கைது

சென்னை திருவான்மியூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு அட்டை பயன்படுத்தி பணம் எடுப்பதைத் தடுத்து கொள்ளையர்கள் பணத்தை அபகரிக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஏடிஎம் கொள்ளை முயற்சி.. உ.பி.,யைச் சேந்த 3 பேர் கைது
ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 26 May 2025 17:38 PM

சென்னை, மே 26: சென்னை திருவான்மியூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அஞ்சல் துறை ஆகியவை செயல்பட்டு வரும் நிலையில் நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது மோசடிகள் நடைபெறுவது மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். ஒரு பக்கம் டிஜிட்டல் முறையில் மோசடிகள் நடைபெறும் நிலையில் மறுபக்கம் ஏடிஎம் சென்டர்களில் பணம் எடுக்க உதவுவது போல் ஏமாற்றுதல், ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்தல் போன்ற குற்ற சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றது.

தலைமை அலுவலகத்திற்கு பறந்த மெசெஜ்

இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை முயற்சி மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. அங்கிருக்கும் திருவள்ளுவர் நகரில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை பதிவிட்ட பிறகும் நீண்ட நேரமாக பணம் வராமல் இருந்துள்ளது. இரண்டு, மூன்று முயற்சி செய்தும் பணம் வராததால் இயந்திர கோளாறு  ஏற்பட்டுள்ளது என  நினைத்து அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையில் மும்பையில் இருக்கும் எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து திருவான்மியூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் இயந்திர கோளாறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அலர்ட் மெசேஜ் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கியின் தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்திற்கு சென்று எப்படி கோளாறு ஏற்பட்டது என்று பார்த்தனர். அப்போது அங்கு கொள்ளை முயற்சி நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. உடனே அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள் இருந்தது.

கருப்பு நிற அட்டை மூலம் கொள்ளை முயற்சி

அதாவது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்துள்ளனர். யாரேனும் பணம் எடுக்க வந்தால், பணம் வராமல் இருக்கும். அவர்கள் சென்ற பிறகு பணத்தை அபகரித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் செயல்படும்படியான காட்சிகள் இடம்பெற்று இருந்தது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அதில் இருந்து பணம் வராததால் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் கண்டனர்.

தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குர்திப் சிங், ஸ்மித் யாதவ், பிரிட்ஜ் பான் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.