த.வெ.க தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு.. இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
TVK District Secretaries Meet: வரவிருக்கும் மக்கள் சந்திப்பு எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக இன்று கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில், தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, டிசம்பர் 11, 2025: தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டம் டிசம்பர் 11, 2025 தேதியான இன்று, சென்னை பனையூரில் இருக்கும் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் கழக செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜயால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அதற்கான அனைத்து பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒருபுறம் மக்கள் சந்திப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் தேர்தலுக்கான பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் பொதுச் சின்னம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட வேண்டியது.
மேலும் படிக்க: கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில் அறிவிப்பு – எப்போ தெரியுமா?
மக்கள் சந்திப்பில் விஜய்:
கடந்த மாதம் காஞ்சிபுரத்தில், தனியார் கல்லூரி வளாகத்திலுள்ள உள் அரங்கில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 2,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்களை சந்திப்பதற்கான பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், புதுவை காவல் துறை தரப்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, மெதுவாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்? நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? வெளியான அறிவிப்பு
இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை (11.12.2025, வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு, சென்னை, தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், நம் கழகத்தின்…
— TVK Party HQ (@TVKPartyHQ) December 10, 2025
இந்த சூழலில், வரவிருக்கும் டிசம்பர் 16, 2025 அன்று ஈரோட்டில் மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கோரி கடிதமும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட நிலையில், இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அதுவே தகுந்த இடமா, மக்களுக்கு தேவையான வசதிகளை அங்கு செய்து தர முடியுமா என்பதைக் கருத்தில் கொண்டு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், வரவிருக்கும் மக்கள் சந்திப்பு எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக இன்று கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது.
ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில், தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோட்டில் நடைபெற இருக்கும் மக்கள் சந்திப்பு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், வரவிருக்கும் தேர்தலை சந்திப்பதற்கான தேவையான பணிகளை மேற்கொள்வது, மற்றும் களப்பணிகளை முன்னெடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.