Pawan Kalyan: விஜய்யை குறைத்து மதிப்பிட முடியாது.. பவன் கல்யாண் பேச்சு!

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சென்னையில் நடைபெற்ற "ஒரே நாடு ஒரே தேர்தல்" கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திரப்பில் பாஜகவின் தேர்தல் பிரச்சார அழைப்பை ஏற்றுக்கொள்வது குறித்தும், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒரே நாடு ஒரே தேர்தலின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

Pawan Kalyan: விஜய்யை குறைத்து மதிப்பிட முடியாது.. பவன் கல்யாண் பேச்சு!

விஜய் - பவன் கல்யாண்

Published: 

26 May 2025 14:50 PM

சென்னை, மே 26: அரசியல் களத்தில் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது என ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் (Pawan Kalyan) தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பவன் கல்யாணிடம், “தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) உட்பட பாஜக நிர்வாகிகள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது உங்களை பிரச்சாரம் செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறார்கள். உங்களுடைய பரப்புரை என்ன மாதிரியாக இருக்கும்?. அதேபோல் உங்களுடைய நண்பரான விஜய்யும் (Thalapathy Vijay) தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அவருக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன? பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “எல்லாரும் எனக்கு நண்பர்கள் தான். நான் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு கட்சி ஆரம்பித்து சரியாக நடக்க வேண்டும் என்றால் அது தலைவரின் பொறுப்பாகும்.  அவர் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்ததாகும்” என தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

 தமிழ்நாட்டை புகழ்ந்த பவன் கல்யாண்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசிய பவன் கல்யாண், “தமிழ்நாடு திருவள்ளுவர் பாரதியார் எம்ஜிஆர் ஆகியோர் வாழ்ந்த பூமி ஆகும். நான் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கிறேன். சென்னையில் வளர்ந்திருக்கிறேன். நான் தமிழ்நாட்டை விட்டு சென்றாலும், அது என்னை விடவில்லை இந்தியாவில் தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுவதால் மிகப் பெரிய பொருட்செலவுகள் ஏற்படுகிறது. தேர்தல் சமயத்தில் அதிகாரிகள், ஆசிரியர்கள், காவலர்கள் ஆகியோர் தொடர்ந்து வேலை செய்யும் நிலை உள்ளது.

இத்தகைய நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலால் நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்கும். மேலும் தேர்தல் செலவுகளையும் வெகுவாக குறைக்க முடியும். இந்த விஷயத்தில் பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி கூட தனது நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை ஆதரித்துள்ளார். ஆனால் அதனை அவரது மகனான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் வாக்கு இயந்திரத்தை ஆதரித்தும் தோற்றால் வாக்கு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுவார்கள் என அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.