பாமகவில் இருந்து எம்.எல்.ஏ., அருள் நீக்கம்.. அன்புமணி அதிரடி அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு எம்.எல்.ஏ. அருள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே உள்ள கருத்து வேறுபாட்டை மேலும் அதிகரித்துள்ளது.

பாமகவில் இருந்து எம்.எல்.ஏ., அருள் நீக்கம்.. அன்புமணி அதிரடி அறிவிப்பு!

பாமக எம்.எல்.ஏ. அருள்

Updated On: 

02 Jul 2025 12:46 PM

தமிழ்நாடு, ஜூலை 2: பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினரான இரா. அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸூக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களுக்குத் தான் கட்சியில் அதிகாரம் இருப்பதாக கூறி மாறி மாறி நிர்வாகிகள் நியமனம், நீக்கம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால் அக்கட்சியின் தொண்டர்களிடையே கடும் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மனக்கசப்பை சரி செய்யும் வகையில் பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பாமக எம்.எல்.ஏ. அருள் கட்சியில் இருந்து நீக்கம்

இப்படியான நிலையில் ராமதாஸ் ஆதரவாளராக கருதப்படும் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் மற்றும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சமீப காலமாக கட்சித் தலைமை குறித்து முதன்மை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இது குறித்து ஆய்வு செய்ய ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. அதன் விசாரணையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக கட்சி தலைமையிடம் ஜூலை 2 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அருள் அதனை மதிக்கவில்லை. இதனையடுத்து கட்சி தலைமையிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்த பரிந்துரை அறிக்கை அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு சட்டத்தின் 30ன் பிரிவின் கீழ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அருள் நீக்கப்படுகிறார்.  பாமக கட்சியினர் யாரும் எந்த வகையிலும் அருளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் அருளுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கியிருந்தார். அதேசமயம் அன்புமணி நடந்து கொள்வது குறித்து செய்தியாளர் சந்திப்பில் எம்.எல்.ஏ. அருள் சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார். ராமதாஸூக்கு மட்டுமே பாமகவில் அனைத்து அதிகாரமும் உள்ளதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.