SIR நடவடிக்கை.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு – அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்..

All Party Meeting: தமிழகத்தில் வரவிருக்கும் நவம்பர் 4, 2025 அன்று இந்தப் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக 70 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9, 2025 அன்று, மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SIR நடவடிக்கை.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்..

All Party Meeting

Published: 

02 Nov 2025 14:03 PM

 IST

சென்னை, நவம்பர் 2, 2025: வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நிறுத்தப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்து கட்சிகளின் சார்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்படும் என இன்று (நவம்பர் 2, 2025) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. இதுவொரு புறம் இருக்க, பீகார் மாநிலத்தில் வரவிருக்கும் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11, 2025 ஆகிய இரண்டு நாட்களில், இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்:

இதனை முன்னிட்டு அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பணிகள் மூலம் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: வாக்காளர் சிறப்பு திருத்தம்.. தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்..

தமிழகத்தில் வரவிருக்கும் நவம்பர் 4, 2025 அன்று இந்தப் பணிகள் தொடங்க உள்ளன. இதற்காக 70 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9, 2025 அன்று, மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சி கூட்டம்:

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (நவம்பர் 2, 2025) தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் இதில் கலந்து கொண்டிருந்தாலும், தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட பல கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சேலம், கோவை, திருப்பூர் வழியாக நின்று செல்லும் புதிய வந்தே பாரத் ரயில்.. முழு விவரம்..

இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: “பீகாரில் பொதுமக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையிலும், அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தணிகள் நடைபெற்றன. அதேபோல், தமிழ்நாட்டிலும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தீர்மானம்:

நேர்மையான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் அதற்கு உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம். தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், முழுமையான திருத்தப் பணிகளைச் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே,” என தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தப் பணியை தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அனைத்து கட்சிகளின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்,” என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பைத் தொட்டியில் கடந்த சீன துப்பாக்கி ஸ்கோப்.. விளையாட்டுப் பொருள் என விளையாடிய சிறுவன்!
‘ரஷ்ய இராணுவத்தில் சேர வற்புறுத்தப்பட்ட குஜராத் மாணவர்’ உக்ரைனில் இருந்து உதவிக்கோரி வீடியோ!
‘உங்கள் வாட்ஸ்அப் ‘ஹைஜாக்’ ஆகும் ஆபத்து’.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!
அடேங்கப்பா.. புர்ஜ் கலீஃபாவை மிஞ்ச தயாராகும் சவூதி அரேபியாவின் ஜெட்டா டவர்..